சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? : டிடிவி தினகரன்

ஜெயலலிதா இறந்த அன்று சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஜெயலலிதா மீதான கோபம்
மத்திய பா.ஜ.க. தலைமை, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எப்படியாவது அ.தி.மு.க.வை அழித்துவிட நினைக்கின்றனர். காரணம் என்னவென்றால் 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை. தேர்தலில் தனியாகவே களம் இறங்கினார். ‘மோடியா, இந்த லேடியா’, என்று கூறி, தனியாக தேர்தல் அறிக்கை கொடுத்து தமிழகத்தில் 37 பாராளுமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

இதனால் ஜெயலலிதாவின் மீது பா.ஜ.க. கடும் கோபம் அடைந்தது. அந்த கோபத்தை அவர் மீது காட்டமுடியவில்லை. ஜெயலலிதாவுடன் எங்கள் குடும்பம் (சசிகலா) 30 வருடங்கள் ஆதரவாக இருந்து வந்திருக்கின்றனர் என்பதால் தான் எங்களிடம் கோபத்தை காட்டுகின்றனர். கட்சியை அழிக்க நினைக்கிறார்கள். தமிழக மக்களுக்கு எல்லாமே தெரியும்.

யாரால் தடுத்திருக்க முடியும்?
நான் கேட்கிறேன், ஜெயலலிதா இறந்த அன்றைய தினமான டிசம்பர் 5–ந்தேதி இரவே சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்றிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்? அல்லது என்னை முதல்–அமைச்சராக ஆக்கியிருந்தால் யார் தடுத்திருக்க முடியும்?

சசிகலா மனது வைத்ததால் தான் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் ஆதரித்ததின்பேரில் முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்க முடிந்தது. இது ஊர் அறிந்த வி‌ஷயம். இதை மறுக்க முடியுமா? இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு ஏஜெண்டுகளாக (முகவர்களாக) செயல்படுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் ஏஜெண்டாகிவிட்டார்.

நல்ல பாடம் கிடைக்கும்
தற்போது முதல்–அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், துணை சபாநாயகர் தம்பிதுரை இவர்கள் அனைவரும் தினமும் வந்து ‘சசிகலா தான் முதல்–அமைச்சராக வேண்டும்’, என அவரிடத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக தம்பிதுரை டிசம்பர் 5–ந்தேதிக்கு பிறகு தினமும் போயஸ் கார்டனிலேயே இருப்பார். டெல்லிக்கெல்லாம் செல்லவே மாட்டார். இங்கேயே இருந்து தினமும் சசிகலாவை சந்தித்து ‘நீங்கள் தான் கட்சி பொதுச்செயலாளராக வேண்டும், நீங்கள் தான் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தபடியே இருப்பார். இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டனர். எல்லாமே மக்களுக்கு தெரியும். நல்ல பாடம் அவர்களுக்கு விரைவிலேயே கிடைக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*