தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடாது என்றால் என்ன நியாயம்?- தங்கதமிழ்ச்செல்வன்

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுமான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தலைமை செயலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேட்டி கொடுக்க சென்றனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார் அவர்களை தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.

அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசார் இருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதன்பின் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் தங்கதமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.

இந்தநிலையில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும், மிரட்டியதாகவும் கூறி தங்கதமிழ்ச்செல்வன் மீதும், வெற்றிவேல் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது… நான் தற்போது என்னுடைய சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள என்.டி.பட்டியில்தான் இருக்கிறேன். இன்று மாலையில் கூட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு, அம்மாவின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 1350பேருக்கு வேட்டி, சேலை, குக்கர், கிரிக்கெட் பேட் மற்றும் பல பொருட்களை வழங்க இருக்கிறேனே தவிர என்னைத் தேடி எந்த படையும் வரவில்லை நான் இங்குதான் இருக்கிறேன்.

முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறினால் அது உண்மையா? இல்லையா? என்று விசாரணை நடத்துங்கள். அதுபற்றி மக்களிடம் கூறுங்கள். அதைவிட்டுட்டு நாங்கள் தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடாது என்றால் என்ன நியாயம்? நான் அம்மாவால் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர். அதுபோல் அம்மா ஆசியுடன் ஆண்டிப்பட்டி தொகுதியில் பல தடவை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன்.

தற்போது எனது தொகுதி மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். அப்படி இருக்கும்போது என்னை தலைமைச் செயலகத்திற்குள் வரக்கூடாது என்று சொல்ல அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. தலைமைச் செயலகம் எல்லோருக்கும் பொதுவான இடம். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் அப்படியிருக்கும் போது எங்களை மட்டும் வரக்கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? எங்களை வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை. அதுபோல் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் என்மீது வழக்குப் போடவில்லை. இருந்தாலும் அதை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோமே தவிர ஓடி ஒழியவெல்லாம் மாட்டோம் என்று கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*