தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க சென்னை வந்தார் வெங்கையா நாயுடு

சென்னை,தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.காவேரி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று இரவு 8 மணி அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார்.

அவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரும் உடனிருந்து அவரை வரவேற்றனர்.இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று நண்பகல் 12.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் பற்றி கேட்டறிகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*