தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

கேரளத்தையொட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளில் கொட்டும் மழை காரணமாக அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

இதனால் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

காவிரியின் துணை ஆறுகளில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக திறந்து விடப்படுவதன் காரணமாக ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் குடிசைகளும், பயிர்களும் மூழ்கி மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

இரு மாவட்டங்களிலும் 200&க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. வெள்ளத்தால் சூழப்பப்ப பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் ‘தட்சண் கங்கோத்ரி’ என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் கூடுதுறை பகுதி இன்றைக்கு தீவு போல காட்சியளித்து வருகிறது.

பாவனி நாகரத்தின் இருபுறமும் பவானி ஆறும், காவிரி ஆறும் பாய்வதால், நடுவில் சிக்கியுள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

எங்கு செல்லவேண்டுமென்றாலும், ஒரு காவிரி பாலத்தையோ, அல்லது பவானி ஆற்றின் பாலத்தையோ கடந்து தான் மற்ற பகுதிகளுக்கு சென்றாக வேண்டும்.

இரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால், பாலத்தின் மீது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தீவில் இருப்பது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவசர தேவைக்கு ஈரோடு செல்ல வேண்டி இருந்தால் கூட, போக முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் நீர் வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீர் மெயின் ரோட்டை தொட்டு விடும் என மக்கள் அஞ்சி வருகின்றனர்.

நேற்று காலையிலேயே நகராட்சி பள்ளிக்கு உள்ளே நீர் புகுந்துவிட்டது. இன்றைக்கு என்ன நிகழப்போகிறதோ என்ற பீதியில் மொத்த நகரமும் பரபரப்புடன் இயங்கி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*