கஜினிகாந்த் – திரைவிமர்சனம்

‘அடல்ட்’ படங்கள் மூலம் யூத் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் தற்போது ‘கஜினிகாந்த்’ மூலம் குடும்ப ரசிகர்களையும் கவரக் களமிறங்கியுள்ளார். அவரின் ‘ஏ’வை மறந்து ‘யு’ ஏற்றுக்கொண்டார்களா ஆல் சென்டர் ஆடியன்ஸ்?

கதைக்களம்

ஞாபகமறதியால் அவதிப்படும் தன் மகன் ஆர்யாவிற்கு பெண் தேடியே சலிப்படைகிறார் அப்பா ‘ஆடுகளம்’ நரேன். கடைசியாக சம்பத்தின் மகள் சாயிஷாவை பெண் கேட்கிறார் நரேன். ஆனால், ஆர்யாவை நேரில் சந்திக்கும் சம்பத், அவரின் ஞாபக மறதி விஷயம் தெரியவரவே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததோடு, ஆர்யா மேல் பெரிய கோபத்திற்கும் ஆளாகிறார். இன்னொருபுறம் சம்பத்தின் மகள்தான் சாயிஷா என்பது தெரியாமலேயே அவர்மேல் காதல் கொள்கிறார். சாயிஷாவையும் அவரை விரும்புகிறார். இந்த விஷயம் சம்பத்திற்கு தெரிந்ததா இல்லையா? ஆர்யா தனது ஞாபகமறதி விஷயத்தை சாயிஷாவிடமிருந்து எப்படி மறைக்கிறார்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ‘கஜினிகாந்த்’.

படம் பற்றிய அலசல்

ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்ட ஒரு கதைக்களத்தை கையிலெடுத்து அதில் ‘ஞாபகமறதி’ எனும் விஷயத்தை புகுத்தி ‘கஜினிகாந்த்’தை சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். தான் நினைத்தபடி ரசிகர்களை படம் முழுக்க சிரிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சதீஷ், கருணாகரன், ‘மொட்ட’ ராஜேந்திரன், காளி வெங்கட் என 4 காமெடியன்களை இறக்கிவிட்டிருப்பதோடு, ‘ஆடுகளம்’ நரேனையும் காமெடியனாகவே காட்டியிருக்கிறார்கள். இத்தனை காமெடியன்கள் இருந்தும் படத்தில் சிரிக்க முடிவதென்னவோ நாலைந்து காட்சிகளில் மட்டும்தான். அதிலும் இரண்டாம்பாதியில் ‘சபாஷ் மீனா’, ‘உள்ளத்தை அள்ளித்தா’ ஆள்மாறாட்டக் காட்சியை அப்படியே ‘கஜினிகாந்தி’லும் பயன்படுத்தியிருப்பது சலிப்பையே ஏற்படுத்துகிறது. இதுபோதாதொன்று இடையிடையே வரும் பாடல்களும் எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஸ்டைல் அப்பாவி கேரக்டர்தான் இந்த ‘கஜினிகாந்தி’லும் கிடைத்திருக்கிறது ஆர்யாவுக்கு. எக்ஸ்பிரஷன்ஸ் பெரிய அளவில் தேவைப்படாத இந்த கேரக்டரில் தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பான பங்களிப்பைத்தான் கொடுத்திருக்கிறார் ஆர்யா. ரொமான்ஸ், காமெடி ஏரியாவில் ஈஸியாக ஸ்கோர் செய்யும் ஆர்யா, இன்னும்கூட ‘சென்டிமென்ட்’ காட்சிகளில் தடுமாறவே செய்கிறார். பார்ப்பதற்கு பளபளவென அழகாகத் தோன்றினாலும் ‘பளிச்’சென மனதில் ஒட்டிக்கொள்ளும்படியான நடிப்பைத் தரும் கேரக்டர் சாயிஷாவிற்கு இந்தப்படத்திலும் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதிவரை தோன்றி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் தந்திருக்கிறார் சாயிஷா. நான்கு காமெடியன்களில் சதீஷைத் தவிர்த்து மற்ற காமெடியன்களுக்கு கதையில் எந்த பெரிய தேவையும் இல்லை. அவர்களால் பெரிதாக ரசிகர்களை சிரிக்க வைக்கவும் முடியவில்லை. தங்களது அனுபவ நடிப்பால் நரேனும், சம்பத்தும் அசத்தியிருக்கிறார்கள். ஒண்ணுக்கும் உதவாத போலீஸ் கேரக்டர் ஒன்றை கொடுத்து ‘விஜே’ லிங்கேஷை வீணடித்திருக்கிறார்கள்.

பலம்

1. சிற்சில காமெடிக் காட்சிகள்
2. ஒளிப்பதிவு

பலவீனம்

1. பார்த்து பழக்கப்பட்ட கதை
2. முதல்பாதி
3. பாடல்கள்

மொத்தத்தில்…

கலர்ஃபுல் ஒளிப்பதிவு, கண்ணுக்கு குளிர்ச்சியாக சாயிஷா, ஒர்க்அவுட்டாகியிருக்கும் நாலைந்து காமெடிக் காட்சிகள் என்பதைத் தாண்டி ரசிகர்களை சுவாரஸ்படுத்துவதற்கு ஆங்காங்கே தடுமாறுகிறான் இந்த ‘கஜினிகாந்த்’.

ஒரு வரி பஞ்ச் : மறதிக்கு சொந்தக்காரன்!

ரேட்டிங் : 4.5/10

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*