ரூ.2000, ரூ.200 நோட்டுகள் அழுக்காகி உள்ளதா ? கவலை வேண்டாம்!

டெல்லி: பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட ரூ.2000, ரூ.200 நோட்டுகள் அழுக்காகி சேதமடைந்திருந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் முழு பணம் கிடைக்குமா? என்பது பற்றிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை ஆர்பிஐ வகுத்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் வகையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இதன்பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000, ரூ.200 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் ரூ.2,000 ரூ.200 நோட்டு தவிர மற்ற நோட்டு கிழிந்து விட்டால் மாற்ற விதி உள்ளது.ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. கடைகளிலும் வங்கிகளும் யாரும் வாங்குவதில்லை.
இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை.
இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 2000 ரூபாய் நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும்.44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும். அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது. அதேபோல 200 ரூபாய் நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது.
50 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றும்போது, நோட்டின் கிழிபடாத பெருமளவு பகுதி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கேற்பத்தான் முழு பணம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*