‘சிறந்த சர்வதேச நடிகர்’ – மெர்சல் காட்டிய விஜய்!

சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்’ படத்தில் நடித்தற்காக விஜய் ‘ஏஜென்ட்’ திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, ‘சைட் சிக் கேங்’ நடிகர் அட்ஜெட்டே அனாங், ‘எல் ஹெபா எல் அவ்டா’ நடிகர் ஹசன், ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் லெஸ்ஸர் காட்’ நடிகர் ஜோஷுவா ஜாக்சன் மற்றும் ‘தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல்’ பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்காக இணையத்தில் வாக்குப் பதிவும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் , இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கபட்டுள்ளது.

அட்லி – விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் படத்தின் ஒரு சில காட்சிகளால் பெரும் சர்ச்சை வெடித்தது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி, கோரக்பூர் மரணம், மருத்துவத்துறையின் ஓட்டைகள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது தமிழக பா.ஜ.க-வினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்த அவர்கள் இந்த படத்தை விமர்சித்து கருத்துகள் வெளியிட்டனர். இதனால் இந்த திரைப்படம் தேசியளவில் பிரபலமானது. அந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்களும் பெரிய அளவில் வைரலானது. இதனால் வசூலிலும் மெர்சல் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*