பிக்பாஸ் வின்னர் ரித்விகா ! இணையத்தில் லீக்கான செய்தி

இந்தா அந்தா என்று பிக்பாஸ் 2 சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒருநாள்… ஒரேயொரு நாள்தான். நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது பிக்பாஸ் 2 சீசன்.

அனந்த் வைத்தியநாதன், மமதி, ரம்யா, மும்தாஜ், பாலாஜி, சென்றாயன், டேனியல், வைஷ்ணவி, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, பொன்னம்பலம், நித்யா, ஷாரிக், மமத், ரித்விகா என 16 பேர் பிக்பாஸ் 2 சீசனில் வீட்டுக்குள் வந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் களைகட்டத் தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக மெர்ஜானார்கள். இவரும் அவரும் அவரும் இவரும் என ஒட்டிக்கொண்டார்கள். இதில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளானார்கள். பாலாஜியின் கோபம் பலரையும் மிரட்டியெடுத்தது. சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தைகள் வேறு உதிர்த்துக்கொண்டே இருந்தார்.

ஆனால், நாளாக ஆக, ஒரு நிதானம் கைக்குள் வந்தது பாலாஜிக்கு.இதேபோல் பொன்னம்பலத்தின் ஜெய் ஸ்ரீராம் எனும் வாக்கியம், அவரின் உள்முகத்தைக் காட்டியது.

ஷாரிக்கை, தன் மகனைப் போலவே பாவித்தார் மும்தாஜ். யாஷிகாவிடம் பிரியமாக இருந்தார். எல்லோரிடமும் நேசத்துடன் இருந்தார். ஆனால் மும்தாஜின் ஆயுதம் அன்பு என்றார்கள்.

சென்றாயனை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவரின் வெள்ளந்தியான பேச்சு எல்லாரையும் மயக்கியது. நேயர்கள் மனதில் இடம்பிடித்தார். இதனிடையே ஒவ்வொருவராக வெளியேறினார்கள்.

அனந்த் வைத்தியநாதன், மமதி என வெளியேறினார்கள். ரம்யா வெளியேறினார். நித்யா வெளியேறினார். பொன்னம்பலம் அண்ணா வெளியேறும் போது, கமலே பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றார்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில், சர்வாதிகாரி டாஸ்க்தான் ஏகத்துக்கும் பாப்புலர். பாலாஜி தலையில் குப்பை கொட்டியது பரபரப்பைக் கிளப்பியது. எதற்கெடுத்தாலும் பாலாஜி சாந்தசொரூபியாய் இருந்தது ஆச்சர்ய புஸ்வாணம். டேனியலும் ஜனனியும் கூட மக்களிடம் பாப்புலரானார்கள். ஒருகட்டத்தில் ஷாரிக் வெளியேறினார். வைஷ்ணவி வெளியேறினார். ‘வைல்டு கார்டு கொடுத்து என்னை உள்ளே விடுங்க சார். அவங்களை… ‘ என்று ஷாரிக் அம்மா உமா ரியாஸ்கான் சொன்னபோது, கமல் தலையிலடித்துக்கொண்டார். அடுத்து விஜயலட்சுமி உள்ளே வந்தார். வைல்டு கார்டு சிஸ்டம்.

மஹத்தும் ஒருசமயத்தில் வெளியேறினார். டேனியல் கிளம்பிய போது, வீட்டில் ஜாலிகேலி குறைந்துபோனது. மும்தாஜ் வெளியேறிய போதுதான் அங்கிருந்தவர்கள், மும்தாஜின் அன்பைப் புரிந்துகொண்டார்கள். டேனியல் வெளியேறிய மறுநாளே காதலியை மனைவியாக்கிக் கொண்டார். சென்றாயன் மனைவி கயல்விழி வந்தார்.நீங்க அப்பா ஆகப் போறீங்க என்று சொன்னபோது பூமிக்கும் வானுக்குமாக குதித்து மகிழ்ந்தார் சென்றாயன். அடுத்த வாரமே சென்றாயன் வெளியேறினார்.

நடுவில், மும்தாஜ், ரித்விகா, ஜனனி, டேனியல், பாலாஜி, விஜயலட்சுமி என அவரவர் வீட்டில் இருந்து குடும்பத்தார் வந்தபோது, முதல் ஆளாக அவர்களை வரவேற்று உபசரித்தார் சென்றாயன். இதில் நேயர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

ஐஸ்வர்யா அம்மா, பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். ‘நீ பெருமைப்படுத்திட்டேம்மா’ என்று மும்தாஜின் அம்மா நெக்குருகிப் போனார். யாஷிகாவை எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஒருகட்டத்தில், ஐஸ்வர்யாவின் குணத்தைப் புரிந்து உணர்ந்துகொண்டார்கள். அந்த அன்புக்கு ஏங்கும் குணம் கண்டு சிலிர்த்தார்கள். பாலாஜியும் யாஷிகாவும் வெளியேறினார்கள்.

கட்டக்கடைசியாக, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா என நான்குபேர்தான் பிக்பாஸ் வின்னர் போட்டிக்கு, வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் 2 சீசன் தொடங்கி, வீட்டுக்குள் வந்ததில் இருந்தே எந்த சடுகுடுக்குள்ளேயும் சர்ச்சைக்குள்ளேயும் சிக்கிக்கொள்ளவே இல்லை ரித்விகா. எல்லோரும் மும்தாஜைப் புறக்கணித்தார்கள். ஆனால் ரித்விகா ஒருபோதும் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை. பாலாஜி அண்ணாவின் மீதும் பொன்னம்பலம் சித்தப்பா மீதும் மரியாதையும் அன்புமாக இருந்தார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத குணமும் எல்லோருக்கும் பிடித்தது. சென்றாயன், டேனியல், யாஷிகா, ஐஸ்வர்யா என நாலாவித குணங்கள் கொண்ட, நாலாவித மனிதர்களுடன் ஒட்டிப் பழகினார்.

யாரையும் யாரிடமும் புறம் பேசாதது இன்னொரு ஸ்பெஷல். அதேசமயம் ஜனனியும் இப்படியான குணங்களுடனே வலம் வந்தார். ஜனனியை எல்லோருக்கும் பிடித்துப் போனது.

பிக்பாஸ் வீட்டில் நூறு நாளைக் கடந்துவிட்ட நிலையில், கவர்ச்சி நடிகையாக அறிமுகமான மும்தாஜும் சரி, ரித்விகா, ஜனனியும் சரி, ஒருநாளும் ஆபாசமாக உடை அணிந்ததே இல்லை என்கிறார்கள் பிக்பாஸ் நேயர்கள்.

இதெல்லாம் கூட பிளஸ் பாயிண்ட் லிஸ்ட்டில் சேரும்தானே.

ஆக, பிக்பாஸ் வின்னர் போட்டியில், ஜனனியா, ரித்விகாவா… என்று போட்டி இருக்கும் என்கிறார்கள். அதேசமயம், கடந்த 20 நாட்களில் ஐஸ்வர்யாவுக்கு க்ரேஸ் அதிகமாகிவிட்டது. அவரின் குழந்தைத்தனம் எல்லோருக்கும் பிடித்துவிட்டது என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

நடுநடுவே, பிக்பாஸ் 1ல் இருந்த பலரும் குறிப்பாக ஆர்த்தி முதலானவர்கள், பிக்பாஸ் வின்னராக தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் வரவேண்டும் என்று சொன்னதையும் கவனிக்கவேண்டும்.

இவற்றையெல்லாம் கடந்து, பிக்பாஸ் வின்னர் ரித்விகாதான் என்று இப்போதே காற்றுவாக்கில் சேதி வந்ததாகச் சொல்லி, வாழ்த்துகள் சொல்லி ஸ்டேட்டஸ் போடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், பிக்பாஸ் நேயர்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*