எம்.எல்.ஏ கருணாஸுக்கு போலீஸ் காவல் கிடையாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸுக்கு போலீஸ் காவல் தர மறுத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 16ம் தேதி தனது அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றும் போது கருணாஸ், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியை சாதி ரீதியாக தாக்கி பேசியதாகவும், காவல்துறை அதிகாரி ஒருவரை கடுமையான விமர்சித்ததாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 23-ம் தேதி அதிகாலையில் போலீஸார் கருணாஸை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, கருணாஸ் தரப்பில் பிணை கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், கருணாஸை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

அப்போது, கருணாஸ் வழக்கில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து, எம்எல்ஏ கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*