சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்!

எம்.எல்.ஏ கருணாசைத் தொடர்ந்து, சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கருணாஸ் பேசியவிதம் சமூகங்களை தூண்டுகின்ற வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்திருந்தது. இதனால் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன் கடமை, பொறுப்புகளை மறந்து இவ்வாறு பேசியிருப்பதால், அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களிலும் செயல்படுபவர்கள் அனைவருக்கும் மாமியார் வீடு ஜெயில் தான். அந்தவகையில் சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார். கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், நிச்சயமாக எச்.ராஜா அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும்.

மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் டி.டி.வி.தினகரன் பெயரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பெயரும் அழைப்பிதழில் போட்டுள்ளோம். நிகழ்ச்சிக்கு வருவதும், வராததும் அவர்களின் விருப்பம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*