கருணாஸுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்!! விரைவில் விடுதலை?

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் பெற்ற எம்எல்ஏ கருணாஸுக்கு, ஐபிஎல் வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16ம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், நான் அடிப்பேன் என முதல்வர் பயப்படுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீ கொலை கூட பண்ணு, அதனை சொல்லிட்டு பண்ணு. ஒரு நியாய தர்மம் இருக்க வேண்டும். என் ஜாதிகாரன் மேல கைய வச்சா கைய கால உடைச்சிருவேன். நாங்க எல்லாம், தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கூட, கொலை செய்யவும் தயங்க மாட்டோம்” என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வரை அவதூறாக பேசியது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், செப்.23 ஆம் தேதி விடியற்காலை, நுங்கம்பாக்கம் காவல்துறையினர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸின் வீட்டில் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரைக் காவல்துறையினர் வேலூர் சிறையில் அடைத்திருந்த நேரத்தில், ஐபிஎல் போட்டிகளின் போது போராட்டம் நடத்தியது மற்றும் ஐபிஎல் ரசிகர்களைத் தாக்கியது உள்ளிட்ட மற்ற வழக்குகளிலும் அவரைக் கைது செய்தது காவல்துறை.

இதையடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு, நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், ஐபிஎல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால் அவர் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று நடைபெற்ற ஐபிஎல் வழக்கு விசாரணையில், எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், அவர் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*