விஜய்யை கண்டு அதிமுகவுக்கு அச்சமில்லை: அமைச்சர் மாஃபா பாண்டியன்

விஜய் போன்ற புதுவரவுகளுக்கு அச்சப்படும் நிலை அதிமுகவுக்கு இல்லை என அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசைவெளியீட்டு விழாவில், சர்கார் படத்தின் பாடல்களை ரசிகர்கள் டிஜிட்டல் முறையில் வெளியிட்டனர்.

இந்த இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், “மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, இதில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார். வெற்றிக்காக எவ்வளோ வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால், ஒருவர் வெற்றியடையக் கூடாது என ஒரு கூட்டமே உழைத்துக் கொண்டிருக்கிறது.

உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னுட்டும், கடுப்பேத்தறவங்களுக்கு கம்முனு இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும். இதை வேண்டும்னா உங்கள் வாழ்க்கையில் முயற்சி செய்யுங்கள்.

எல்லோரும் கட்சித் தொடங்கி, பிரச்சாரம் செய்து, தேர்தல்ல நிப்பாங்க, நாங்க சர்கார் அமைத்து தேர்தல்ல நிக்கப்போறோம். படத்தில் முதல்வராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதல்வரானால், முதல்வராக நடிக்க மாட்டேன். நான் முதல்வரானால் லஞ்சம், ஊழல் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அதை ஒழிப்பது எளிதானதல்ல. அது வைரஸ் போல பரவியுள்ளது.

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்வதால், கீழ்மட்டத்திலிருப்பவர்கள் ஊழல் செய்வார்கள். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தலைவன் சரியாக இருந்தால், கட்சி சரியாக இருக்கும். வாழ்க்கையில் அடிப்பட்டு கீழே இருந்து ஒருவன் மேலே வருவான், அவன் தலைமையில் ஒரு சர்கார் நடக்கும்” என தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்யின் கருத்தை, ஒரு சில அரசியல்வாதிகள் வரவேற்றும், ஒரு சில அரசியல்வாதிகள் எதிர்த்தும் வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்த அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விஜய்க்கு அரசியல் தெரியாது. அவர் தன்னை எம்ஜிஆர் போல நினைத்துக் கொள்கிறார். அவர் சர்க்கஸ் வேண்டுமானால் காட்டலாம்,” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் விஜய்யின் கருத்திற்கு பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,” அரசியலுக்கு வர நடிகர் விஜய்க்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. அவரைப் போன்ற புது வரவுகளுக்கு அச்சப்படும் நிலையில் அஇஅதிமுக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*