தி.மு.க.,வுக்கு செல்ல மாட்டேன். அதற்கான அவசியம் இல்லை : செந்தில் பாலாஜி

டி.டி.வி.தினகரனின் நம்பிக்கைக்குரியவரான செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என அடித்துச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதனால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் திகைத்து நிற்கின்றன. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவர் திமுகவில் இணையப்போவதாக ஒரு பரபரப்பை கொழுத்திப் போட்டனர். இந்த வதந்தியை பரப்பியது திமுகவா? அதிமுகவா? என இப்போது விவாதம் நடந்து வருகிறது.

”திருச்சியில் உள்ள மிகப் பிரபலமான ஹோட்டலுக்குக் கடந்த வாரத்தில் வந்த திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷை செந்தில் பாலாஜி சந்தித்ததாக கூறப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை. ‘செந்தில் பாலாஜி இங்கே நம்ம கட்சிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லியிருக்காரு. மகேஷ் மூலமாக பேசியிருக்காங்க. அரவக்குறிச்சியில் நம்ம கட்சி சார்பாகவே அவருதான் நிற்கப் போறாரு’’ என கரூர் திமுக வட்டாரம் கொழுத்திப் போட்ட வதந்தி பற்றி எரிந்தது.

தினகரன் அதிகம் நம்பும் நபர்களில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். இன்னொருவர் செந்தில் பாலாஜி. சசிகலா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான நட்பு பாராட்டுபவர் செந்தில் பாலாஜி. எனவே அவர் கட்சி தாவப் போகிறார் என்ற செய்தியை அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள செந்தில் பாலாஜி, ‘’சென்னையில் நடந்த, ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்தில் நான் பங்கேற்கவில்லை என்பது பொய். தினகரன் சென்ற ஜீப்பில் செல்லவில்லை. ஆனால், நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை அங்குதான் இருந்தேன். ஆளும் கட்சியினர் திட்டமிட்டு, நான் தி.மு.க.,வுக்கு செல்வதாக அவதூறு பரப்புகின்றனர்.

அதன் மூலம், கரூர் மாவட்ட அ.ம.மு.க., நிர்வாகிகள் இடையே, சலசலப்பை ஏற்படுத்த பார்க்கின்றனர். நான் தி.மு.க.,வுக்கு செல்ல மாட்டேன். அதற்கான அவசியம் இல்லை. விரைவில் அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், மக்கள் விரும்பும் ஆட்சி அமையும்’ எனக்கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*