6 மாதத்திற்கு ஒரு முறை ஸ்டாலின் லண்டன் செல்வது ஏன் காணிக்கை செலுத்தவா? டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் உருவாக்கிய சாதனையை நாங்களே திருவாரூரில் முறியடிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சேத்தியாத்தோப்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக கும்பகோணம் சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தனியார் விடுதியில் தங்கினார்.

இன்று சேத்தியாதோப்பு சென்றுபோது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “அப்பா தொகுதியில் தேர்தல் நடக்கும்போது மகனான ஸ்டாலினுக்கு போட்டியிட ஏன் பயமாக இருக்கிறது? தேர்தல் நடைபெற்றால் நாங்கள்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.” என்றார்.

“திருவாரூர் தொகுதி ஏற்கெனவே திமுக வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெற ஸ்டாலினுக்குத் தெம்பு இல்லையா? என்று தெரியவில்லை. அவருக்குத் தைரியம் இல்லை.” என்று சாடினார்.

மேலும், “சித்தியை பார்க்க போனால் நேர்த்திக்கடன் என்று சொல்கிறார். ஆனால் இவர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். இது எந்த நேர்த்திகடன் ஆகும்? ஒரு காலத்தில் எனக்கு பதில் சொல்ல முடியாது என குறைந்து மதிப்பீடு செய்தார். இப்போது ஏன் பதில் சொல்கிறார் என்று தெரியவில்லை.” என்றும் தெரிவித்தார்.

“ஆர்.கே. நகரில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அதேபோல திருவாரூர் தொகுதியில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். தேர்தல் நடந்தே ஆகவேண்டும். என் மீது தற்போது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் திமுகவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. அகில இந்திய அளவில் தன்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆர்.கே.நகரில் போட்டியிட்ட என்னை மக்கள் பத்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர். திமுக டெபாசிட் இழந்தது. அதனால்தான் டெபாசிட்டை இழந்த ஸ்டாலின் என்று சொல்கிறார்கள்.” என்று கடுமையாக விமர்சித்தார்.

“எங்களுக்கு போட்டி என்பது கிடையாது. எங்க ரெக்கார்டை நாங்க தான் பிரேக் பண்ணனும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியைவிட கருணாநிதி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காமராஜர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். புதிய சாதனை படைப்போம். திருவாரூர் கோட்டையைப் பிடிப்போம்.” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*