‘வாணி ராணி’யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகும் வாணி ராணி சீரியலில் #MeToo இயக்கத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி இடம்பெற்றது ஏன் என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய #MeToo விவகாரத்தின் போது பாடலராசிரியர் வைரமுத்து மீது புகார் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இவர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்.

நயன்தாராவைப் பற்றி மூத்த நடிகர் ராதா ரவி கீழ்த்தரமாக பேசியதையும் நேரில் கண்டித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு விவகாரத்தில் ராதா ரவியின் சகோதரியும் பிரபல டீவி சீரியல் நடிகையுமான ராதிகா சரத்குமாரை விமர்சித்துள்ளார்.

ராதிகா சரத்குமார் நடிப்பில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் வாணி ராணி என்ற சீரியலில் இடம்பெற்ற ஒரு காட்சி #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கிறது என சின்மயி கூறியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், #MeToo விவகாரத்தை ஏன் பிளாக் மெயில் செய்யும் வழி போல தவறாக சித்தரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட அந்த எபிசோடை தான் முழுமையாகப் பார்க்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த ராதிகா, “நான் பல ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். பெண்களுக்காக பல விவகாரங்களில் போராடி வருகிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட காட்சி பற்றி விமர்சனம் இருந்தால், நேரில் என் அலுலவகத்துக்கு வந்து பேசலாம்.” எனக் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*