தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ள நிலையில், தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி.கே.வாசன் தமாகா தலைவரானார். 2002-ல் தமாகா கட்சியை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விலகியதால் ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில், தங்களுடைய கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம், 8 வாரத்தில் முடிவெடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.ஆனால், இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, கட்சி தலைவரான ஜி.கே.வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என்ற பிரதான மனு மீதான விசாரணையை தேர்தலுக்கு பிறகு ஒத்திவைத்தனர்.

சைக்கிள் சின்னம் வழங்க குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*