சிவகங்கை தொகுதியில் எளிதாக வெற்றி பெற காத்திருக்கும் அமமுக!

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தனித்துப் போட்டியிடும் அமமுக, மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் போட்டியிட களமிறங்கியுள்ளது. இத்தொகுதி அதிமுகவுக்கு சவாலாக இருப்பதால் அக்கட்சியினர் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதால் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது மகனுக்காக தொகுதியை தயார்படுத்தி வருகிறார். அதிமுக கூட்டணியில் யாருக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்ற நிலையில் கட்சியினரிடையே குழப்பம் நிலவுகிறது.

அதிமுகவுக்குப் போட்டியாக அமமுகவும் களத்தில் இறங்குவதால் அதிமுகவினர் கிலியில் உள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அமமுகவின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே.உமாதேவன், பேரவை மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அன்பரசன், துணைச் செயலாளர் குரு.முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில் அதிமுகவுக்குள் ஈபிஸ், ஓபிஸ் அணியாக பிரிந்திருந்தாலும் வெளியில் தெரியவில்லை. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி ஆகிய 2 தொகுதிகளில் ஈபிஸ், ஓபிஎஸ் அணியினர் கோஷ்டியாக செயல்படுவதால் நடந்து முடிந்த கூட்டுறவுத் தேர்தலில் இரு அணியினரும் முட்டி மோதி பிளவுபட்டுக் கிடக்கின்றனர். அதிமுகவில் தலைமை மீது வெறுப்பில் உள்ள கட்சித் தொண்டர்களை அமமுக தன் வசப்படுத்துவதால் தொகுதியில் கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி வரையறைக்கு முன் மானாமதுரை தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்தபோது போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக முன்னாள் எம்பி மலைச்சாமி பேசும்போதெல்லாம், தனது வெற்றிக்கு காரணமான மானாமதுரை தொகுதியை ‘மானம் காத்த மானாமதுரை தொகுதி’ என அடைமொழியுடன் பேசுவதுண்டு. அவ்வாறே அதிமுகவினரும் அடை மொழியுடன் அழைத்து வந்தனர்.

இத்தொகுதியில் 2016 தேர்தலில் அதிமுக மாவட்டச் செயலாளர் பெரி.செந்தில்நாதனின் ஆதரவாளரான மாரியப்பன் கென்னடி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அவர் டிடிவி.தினகரன் அணிக்குச் சென்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அமமுகவின் அம்மா பேரவை மாநிலச் செய லாளராகவும், தேர்தல் மண்டலப் பொறுப்பாளராகவும் உள்ள மாரியப்பன் கென்னடி, இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிவாகை சூட வேண்டும் என தேர்தல் பணியில் இறங்கியுள்ளார். இத்தொகுதியைச் சேர்ந்த இளையான்குடியில் சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பதால் அதிமுக- பாஜக கூட்டணியை விரும்பாத இவர்களின் வாக்குகள் சிதறும் நிலை உள்ளது. இது அமமுகவுக்கு கூடுதல் வாய்ப்பாகும்.

அதிமுகவின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் அக்கட்சியினர் கிலியில் உள்ளனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவினரும் களப்பணியைத் தொடங்கி விட்டனர். ஆனால், மானாமதுரை தொகுதியில் அதீத அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*