ஓபிஎஸ் மகன் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல்? – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தேனியில் பண பலமும், அதிகார பலமும் சேர்த்து என்னை தோற்கடித்துவிட்டது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

தேனி மக்களைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிர்ஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 76693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘தேனியில் வெற்றி பெற முடியாமல் போனது உருவாக்கப்பட்ட தோல்வி. தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தலின் போது தில்லு முல்லு நடந்துள்ளது. தேனியில் பண பலமும், அதிகார பலமும் சேர்த்து என்னை தோற்கடித்துவிட்டது. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சீல் அகற்றப்பட்டே இருந்தது.

துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்  தனி கவனம் செலுத்தி வெற்றி பெற வைத்துள்ளது. சுனாமி போல் பணம் இறக்கப்பட்டு தேனியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் அளித்தது உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு தொடர உள்ளேன். அதில், விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளுடன், வாக்குகளை சரிபார்க்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஓபிஎஸ் மகனின் மீது மட்டும் மோடிக்கு ஏன் அவ்வளவு காதல் என்று தெரியவில்லை. அதிமுக தில்லு முல்லு செய்தும் ஆண்டிப்பட்டி பகுதியில் நான் அதிக வாக்குகள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய 4 பேர் கொண்ட குழுவை ராகுல் காந்தி அமைத்துள்ளார். 2 எம்பிக்களை வைத்துக்கொண்டே மக்களவையில் பல சாதனைகளை 1957-ல் திமுக செய்தது. இப்போது 23 திமுக எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயம் மக்களுக்கு நன்மை செய்வர் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*