மன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்

தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மன்னர் ராஜராஜ சோழனை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசலாமா என இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார்.ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையானது. தொடர்ந்து தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பா.ரஞ்சித் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் தந்தை பெரியார் எழுதிய சுயமரியாதை சமதர்மம் என்ற புத்தகம், குடவாயில் பாலசுப்ரமணிய ன் எழுதிய தஞ்சாவூர் என்ற புத்தகம், வெண்ணிலா என்ற ஆசிரியர் எழுதிய தேவரடியார் என்ற புத்தகம், ஆகிய புத்தகங்களின் அடிப்படையில் தான் இயக்குநர் ரஞ்சித் பேசியதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பண்டைய காலத்தில் நடந்ததை தற்போது ஏன் பேச வேண்டும்? ராஜராஜ சோழ மன்னரை இலக்காக வைத்து பேச வேண்டிய அவசியம் என்ன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். மேலும் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கலாமா என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து, பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, அவரை கைது செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்தது. இதையடுத்து வரும் 19-ம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, அதற்குள் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணையை ஒத்திவைத்தார் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*