திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்ய அரசு முடிவு!

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவகர் குழுவை ரத்து செய்ய ஆந்திர அரசு முடிவு செய்தது. அதே நேரம் அறங்காவலர் குழுத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக சுதாகர் ரெட்டி தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை ரத்து செய்வது என்று அரசு முடிவு எடுத்துள்ளது என்றும், ஏழுமலையான் கோவில் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஸ்ரீ நிவாஸ் பேட்டி அளித்தார். அப்போது, கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு தேர்தல் முடிவுகளுக்கு பின் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அறங்காவலர் குழுவினர் பதவி விலக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அறங்காவலர் குழுவை ரத்து செய்து விரைவில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏழுமலையானின் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பக்தர்களுக்கு ஏழுமலையான் திருவாபரணங்கள் மீது இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பணியில் இருக்கும் பரம்பரை அர்ச்சகர்கள் தொடர்பான பிரச்சனைகள் ஆந்திரா முழுவதும் உள்ளன. பரம்பரை அர்ச்சகர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும். தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1300 கிலோ தங்கத்தை சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வந்ததில் குழறுபடிகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகள் மீது விசாரனை நடத்தி அவற்றில் உண்மை இருப்பதாக தெரிய வந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதே நேரம், இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்த தகவல் வெளியான நிலையில், திருப்பதி திருமலை அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவராக தற்போது இருந்து வருபவர் புட்டா சுதாகர் யாதவ். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது இவர் அறங்காவலர் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டவர். இதனிடையே, புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஜெகன் மோகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பா ரெட்டி நியமிக்கப் படுவார் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் அவர் ஒரு கிறிஸ்துவர் என்றும், இந்து மதத்தை சாராத ஒருவர் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அறங்காவலர் தலைவராக பதவி ஏற்பது தவறு என்றும் கருத்துகள் பரவின.