ஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது?


சென்னை: தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்து வருவதாலும், காய்கறிகளின் விலையேற்றத்தாலும், ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பண்டங்களின், விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓட்டல்களில் உணவு சமைக்கவும், குடிநீர் வழங்கவும், பாத்திரங்களை கழுவவும், அதிக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால், ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.தண்ணீருக்கான செலவு, வழக்கத்தை விட, 30 சதவீதம் மேல் அதிகரித்துள்ளது. அதனால், பல ஓட்டல்களில், தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய, சாப்பாடு வகைகள் நிறுத்தப்பட்டன.
n மேலும், 'கேன் வாட்டர்' விலையும், காய்கறிகளின் விலையும், பலமடங்கு உயர்ந்து விட்டன. இதனால், கூடுதல் செலவை சமாளிக்க முடியாததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், வியாபார போட்டியால், வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத, பல ஓட்டல் உரிமையாளர்கள், தண்ணீரால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க, உணவு பண்டங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.