முதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியை தழுவியது. தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி வாகை சூடினார்.

அதேசமயம் திமுக தலைமையில் போட்டியிட்ட கூட்டணி 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக உடன், திமுக கூட்டணி அமைக்கவில்லை. எனவே மத்திய அரசில் அங்கம் வகிக்க இயலாத நிலையில், தமிழக எம்.பிக்கள் என்ன சாதிப்பர் என்று கேள்வி எழுந்தது.

கடந்த முறை 37 எம்.பிக்களை பெற்றிருந்த அதிமுக, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுத் தரவில்லை. வெறுமனே போராட்டங்கள், வெளிநடப்பு என்று காலத்தைக் கடத்தினர். அப்போதைய பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித நலனும் செய்துதரவில்லை.

இதேபோன்ற மனநிலை தற்போது திமுக எம்.பிக்கள் மீதும் எழுந்தது. அதேசமயம் தற்போது திமுக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிக்கள் பட்டதாரிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் என்று இருப்பதால் தமிழகத்திற்கு உறுதியான நன்மை செய்ய வழிவகுப்பர் என்றும் கூறப்படுகிறது.

அதனை உறுதிசெய்யும் வகையில், முதல் நாளிலேயே மக்களவையில் திமுக கூட்டணி எம்.பிக்கள் கெத்து காட்டியுள்ளனர். அதாவது, 38 பேரும் தமிழ் மொழியில் பதவியேற்று, தமிழின், தமிழ் இன தலைவர்கள் பெருமைபாடும் கோஷங்கள் எழுப்பினர்.

இது நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் எம்.பிக்கள் பதவியேற்றதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் ”பாரத் மாதா கி ஜே” என்று புகழ் பாடினர். ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, தமிழக எம்.பிக்கள் தமிழில் பேசி மக்களவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.

”வாழ்க அம்பேத்கர், பெரியார்” என்று கூறி திருமாவளவன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். ”வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என்று ரவீந்திரநாத் குமார் பதவியேற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவியேற்றுக் கொண்ட போது, காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் வாழ்க என்று குறிப்பிட்டார். மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் “தமிழ் வாழ்க” என்ற கூறி பதவியேற்றுக் கொண்டார்.

இதேபோல் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் பதவியேற்றனர். நீலகிரி தொகுதி எம்பியாக ஆ.ராசாவும், பொள்ளாச்சி தொகுதி எம்பியாக சண்முகசுந்தரம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

கரூர் தொகுதி எம்பியாக ஜோதிமணியும், திருச்சி தொகுதி எம்பியாக திருநாவுக்கரசர் பதவியேற்றுக் கொண்டனர். பெரம்பலூர் தொகுதி எம்.பியாக பாரிவேந்தர் பதவியேற்ற போது, தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்று கூறினார்.

READ  சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு நடந்த ஸ்பெஷல் விஷயம்!

ஜெய் ஜவான், ஜெய் கிஷான், பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க என்று கூறி, கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார்.