தாராளம்! மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது


மதுரை: மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தை பந்தாடும் குடிநீர் தட்டுப்பாடு மதுரையையும் விட்டுவைக்கவில்லை. கோடை காலத்துக்கு முன்பு வரை மாநகராட்சிக்கு 175 எம்.எல்.டி., குடிநீர் கிடைத்தது. பின்பு படிப்படியாக குறைந்து தற்போது 130 எம்.எல்.டி., மட்டுமே கிடைக்கிறது. வைகை அணையில் இருந்து கிடைக்க வேண்டிய 115 எம்.எல்.டி., மட்டுமே முழுமையாக பெறப்படுகிறது. இதர நீராதாரங்கள் வறண்டுவிட்டன.இதனால் இருநாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறுகிறது. அதே வேளையில் குடிநீர் வினியோகம் செய்யும்போது, பல வீடுகள், நிறுவனங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டும் தாராளமாக நடக்கிறது.
n தேர்தல் காலத்துக்கு முன்பு வரை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். தேர்தலின்போது நடவடிக்கை மேற்கொண்டால் ஓட்டுப்பதிவு குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியதால், குடிநீர் திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.தற்போது தேர்தல் முடிந்த நிலையிலும் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தொடரும் குடிநீர் திருட்டால் மேடான பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். இத்திருட்டுக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் திருட்டை ஒருபோதும் மாநகராட்சி அனுமதிக்காது. இதுகுறித்து தொடர் சோதனை நடத்தப்படும். குடிநீர் திருடுவது தெரிந்தால் வீடுகளுக்கு இணைப்பு துண்டிக்கப்படும்' என்றனர்.