#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி

சென்னை: சமூக வலைதளங்களில் #தவிக்கும் தமிழ்நாடு ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.தமிழகத்தின் இருண்ட காலம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம் என இயக்குனர் பா. ரஞ்சித் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இருப்பினும், மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் கொண்டுவரப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் இன்றும், செயல்பாட்டில் இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தற்போது நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு, ஆண்டவன் காரணமா அல்லது ஆண்டவர்கள் காரணமா என்று விவாதம் நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டார்கள் இணையதளவாசிகள்.நீர் வள மேலாண்மையில் பூஜ்யம்! சாராய சாம்ராஜ்யம் மட்டுமே! கொந்தளிக்கும் மக்கள்! தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. விவசாயமும், தண்ணீரும் எவ்வளவு முக்கியம் என்று மக்களுக்கு புரிய வைக்கிறது. இனிமேலும் விழிப்புணர்வு வரவில்லை எனில், கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய மூன்றாம் உலகப் போர் போல் நீருக்காக. ஒரு யுத்தமே நடக்கும். மரம் நடுவோம்… என்று எல்லாம் தங்களது வேதனைகளையும், ஆதங்கங்களையும் பலர் பதிவிட்டு வருகின்றனர். சென்னை நகருக்கு குடிநீர் வழங்கி வந்த செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்ட நிலையில், தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கல்குவாரி நீர் நிலைகளை கண்டறிந்தது, சுத்திகரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை தொட்டாலும், மண்ணை காக்க, தண்ணீர் பஞ்சத்தை போக்க இன்னும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.

தங்கத்தின் விலையை காட்டிலும், தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது. தண்ணீர் பிரச்சனை அரசியல் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி, மாறி புகார்களை முன்வைத்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் இரவு தூக்கத்தை தொலைத்து தண்ணீருக்காக காத்து இருக்கின்றனர். நடப்பாண்டில் ஏரி, குளங்களை விவசாயிகள் பங்களிப்போடு தூர்வாரும் குடிமராமத்து பணிகளுக்கு 499.கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிகளுக்காக கடந்த 2017ம் ஆண்டு 100 கோடி ரூபாயும், கடந்த ஆண்டு 331 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீடு மட்டும் உயர்கிறது. அணைகளோ, நீர் நிலைகளோ எதுவும் புதிதாக உருவாக்கப்படவில்லை. இருக்கும் நீர் நிலைகள் மட்டுமே சுருக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். #Pray for Neasamani ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்டிங் செய்தவர்கள், இன்று #தவிக்கும் தமிழகம் என்று ட்ரெண்டிங் செய்ய தொடங்கி உள்ளனர். பொழுப்போக்கு வேறு, அத்தியாவசியம் வேறு என்று புரிந்து கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.