காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல்

கனடா: காணாமல் போனவர் சடலமாக மீட்பு… கடந்த திங்கட்கிழமை பிற்பகல் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொரன்ரோவைச் சேர்ந்த ஒருவர் Huntsville பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை ஐந்து மணியளவில், பெனின்சுலா ஏரிப்பகுதியில் இருவர் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்ததாகவும், தனது கணவரும், மகனும் நீந்தச் சென்று திரும்பவில்லை என்று படகு ஒன்றிலிருந்த பெண் ஒருவர் முறைப்பாடு செய்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வேகமாக காற்று வீசியதால், குறித்த அந்த இருவரும் நீந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து படகு அப்பால் நகர்ந்து சென்றுவிட்டதாகவும், படகின் இயந்திரத்தை இயக்க முடியாமையை அடுத்து குறித்த அந்தப் பெண் 911 அவசர உதவி இலக்கத்திற்கு அழைப்பு எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
n அதனை அடுத்து Huntsville தீயணைப்பு படையின் நீச்சல் பிரிவு, ஒன்ராறியோ மாகாண காவல்துறையின் நீச்சல் பிரிவு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தேடுதலின் போது குறித்த அந்தப் பெண்ணின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், தந்தையைத் தேடும் பணிகள் தொடர்ந்ததாகவும், செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணியளவில் நீரடி நீச்சல் வீரர்கள் தந்தையாரின் சடலத்தை மீட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ரொரன்ரோவைச் சேர்ந்த 56 வயதான மார்ட்டின் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

READ  சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு நடந்த ஸ்பெஷல் விஷயம்!