கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்?


அருவி திரைவிமர்சனம் – Aruvi Tamil Movie Review

நடிப்பு – அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சுவாமி, கவிதாபாரதி
இயக்கம் – அருண் பிரபு புருஷோத்தமன்
இசை – பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ்
தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

 

 

2017ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் வியாபார ரீதியாக கொஞ்சம் மோசமான வருடமாக இருந்தாலும், தர ரீதியில் கொஞ்சம் சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது. அறம் படத்திற்குப் பிறகு நாளை வரப் போகும் அருவி படமும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே மாற்று சினிமா என்பது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று. வர்த்தக ரீதியிலான மசாலாப் படங்கள் தான் இங்கு அதிகம் வருகின்றன. மலையாளப் படங்கள் போல பெங்காலிப் படங்கள் போல மக்களின் பிரச்சனைகளை, வாழ்வியலை சொல்லும் படங்கள் வருவதேயில்லை என்று குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

 

அந்தக் குறையை சமீபத்தில் தீர்த்து வைத்த படம் அறம். அடுத்து தீர்த்து வைக்கப் போகும் படம் அருவி. இந்தப் படம் சமூகத்தின் பார்வையையும், நன்றாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தையும் நம் உள்ளுணர்வுகளுக்குள் ஓங்கி அடிக்க வைக்கும் படமாக இருக்கிறது.

தென் கோடி தமிழ்நாட்டிலிருந்து அப்பாவின் பணிமாற்றம் காரணமாக சிறு வயதிலேயே சென்னைக்கு குடும்பத்தாருடன் வந்து செட்டில் ஆகிறார் அதிதி பாலன். எந்தக் கவலையும் இல்லாமல், மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும் அவரது இளமைப் பருவத்தில் திடீரென ஒரு புயல் வீசுகிறது. உடலால் அவர் கெட்டுவிட்டார் என அவரது குடும்பமே அவரை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறது. வெளியில் வந்து திருநங்கை அஞ்சலி வரதன் ஆதரவுடன் போராட்டமான வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். தன்னை மூன்று பேர் கற்பழித்து விட்டார்கள் என நீதி கேட்டு சொல்வதெல்லாம் சத்தியம் என்ற டிவி நிகழ்ச்சிக்குச் சென்று நியாயம் கேட்கிறார். திடீரென அதிரடியாக அந்த நிகழ்ச்சிப் படக்குழுவினர் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி பரபரப்பை உண்டாக்குகிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களும், நமக்குத் தெரிய வரும் உண்மைகளையும் பார்த்து கண்கலங்காமல் இருக்க முடியாது.

 

வாழ நினைக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதுவரை வந்திருக்கவே முடியாது என ஆணித்தரமாகச் சொல்லலாம். படத்தை இயக்கியுள்ள அருண் பிரபு புருஷோத்தமன் போன்ற இளம் அறிமுக இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது தமிழ்ப் படங்களை வேறு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை அருவியாய் கொட்ட வைக்கிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *