தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் : தங்கதமிழ்செல்வன்

தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்- தங்கதமிழ்செல்வன் சொல்கிறார்


தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தேனி:

தேனியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா நடந்தது. அப்போது நிருபர்களிடம் தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, தினகரனுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் ‘சிலீப்பர் செல்’ இல்லை. மனம் மாறி, தொகுதி மக்களின் எண்ணம் அறிந்து அவர் எங்கள் பக்கம் வந்துள்ளார். அங்கே (அ.தி.மு.க.) சிலீப்பர் செல்கள் அதிகம் பேர் உள்ளனர். இன்னும் நிறைய பேர் வருவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். குடும்ப அரசியல் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்ப உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும். ஒரே மேடையில் அவருடைய மகன், மருமகன், மச்சினன், தம்பி எல்லோரும் அமர்ந்து இருந்தால், அ.தி.மு.க. தொண்டர்கள் எப்படி ஓ.பன்னீர்செல்வம் பின்னால் செல்வார்கள். அவரை தோற்கடிக்க நாங்கள் வேலை பார்த்தோம் என்று சொல்வது அப்பட்டமான பொய்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

கேள்வி:- ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்திருப்பது பற்றி?

பதில்:- பா.ஜ.க. அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஜெயலலிதாவிற்கு நண்பர் என்று கூறிக்கொள்பவர், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது ஒரு முறை கூட நேரில் வந்து பார்க்கவில்லை.

பா.ஜ.க.வின் தொடர் மிரட்டலில் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு உதாரணம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மோடி கூறியதால் தான் நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன் என்று கூறியது.

அப்படியென்றால் மோடி பேச்சை தான் ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். அதேபோல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மோடி பேச்சை தான் கேட்கிறார்.

ஜெயலலிதா அறிவித்த ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு வரும் மோடி, சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவபட திறப்பு விழாவிற்கு வராதது ஏன்? அவர் ஜெயலலிதாவின் நண்பர் தானே? அவர் வந்து ஜெயலலிதா உருவப்படத்தை திறந்தால் எங்களுக்கும் பெருமை தானே? நாங்கள் அதைத்தானே வலியுறுத்தினோம்.

இந்தியாவில் தலை சிறந்த தலைவர் ஜெயலலிதாவின் உருவ படத்தை ஜனாதிபதியோ, பிரதமரோ நேரில் வந்து திறந்து வைப்பது தானே நியாயம். அதேபோல எங்களுக்கு இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது.

மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு ஆண்டுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தைக்குதான் பிரதமர் தற்போது தமிழகம் வருவதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *