கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அடர்ந்த காட்டின் நடுவில் ஒற்றையடி பாதை?


2 வாரம் தங்குகிறார்: நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை பயணம்

 நடிகர் ரஜினிகாந்த் இன்று(சனிக்கிழமை) இமயமலைக்கு செல்ல இருக்கிறார். அங்கு 2 வாரம் தங்கும் ரஜினிகாந்த், சென்னை திரும்பியதும் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு, அரசியலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தேர்வு செய்து வரும் அவர், மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டம் தீட்டி வருகிறார். அரசியல் அறிவிப்பை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் ‘தமிழக அரசியலில் நிச்சயம் வெற்றிடம் இருக்கிறது என்றும், அதை நான் நிரப்புவேன்’ என்றும் தெரிவித்தார். இந்த பேச்சு அனைத்து அரசியல் தலைவர்களையும் சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளது.அதுமட்டுமில்லாமல், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாகவும், பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டார்.இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று(சனிக்கிழமை) அதிகாலை இமயமலைக்கு பயணம் செய்கிறார். டெல்லி வழியாக இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் அங்கு 2 வாரம் தங்குகிறார். பொதுவாக ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அவ்வப்போது இமயமலைக்கு செல்வது வழக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஆசிரமம் கட்டியுள்ளார். அந்த ஆசிரமத்தின் திறப்பு விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதற்கு நடிகர் ரஜினிகாந்தால் போக இயலவில்லை.அதன் பின்னர், அங்கு பனிக்காலம் என்பதால் இமயமலை செல்லும் பயணத்தை ஒத்திவைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை செல்ல இருக்கிறார் என்று அவருடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வருவது ஒரு சென்டிமென்டாகவே பார்க்கப்படுகிறது. அவருடைய ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அந்த படம் வெளியாவதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்று சாதாரண மனிதராக அங்குள்ள சாமியார்களை சந்தித்து ஆசி பெற்று திரும்புவார். அது அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் என்று நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்த பிறகு, நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக இமயமலைக்கு பயணம் செல்ல இருக்கிறார். ஏற்கனவே ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு அன்று தன்னுடைய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்ய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வரும் இந்த நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்று திரும்பியதும், கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும், மேலும் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *