தமிழகம் முழுவதும்போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு 6,140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டி

தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 6 ஆயிரத்து 140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டியில் உள்ளனர்.போலீஸ் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 140 பணி இடங்களுக்கு விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 3¼ லட்சம் பேர் விண்ணப்ப மனுக்களை அனுப்பி இருந்தனர்.

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக இதற்கான எழுத்து தேர்வு 232 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி, 11.20 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.சென்னையில் 21 மையங்களில் தேர்வு நடந்தது. 23 ஆயிரத்து 956 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள் 21 ஆயிரத்து 700 பேர். பெண்கள் 2 ஆயிரத்து 256 பேர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர்.

இந்த தேர்வில் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் நேற்று காலை 6 மணியில் இருந்தே தேர்வு மையங்களில் காத்திருந்தனர். பின்னர் குழந்தைகளை தேர்வு மையத்துக்கு வெளியே உறவினர்களிடம் விட்டுச் சென்றனர். கர்ப்பிணிகளும் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு மையங்களுக்குள் செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கூட வயர்லெஸ் கருவிகளை கையில் வைத்திருக்கவில்லை. காலை 10.15 மணி வரை தேர்வு எழுத வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சில பெண்கள் அழுதபடியே, தேர்வு மையத்தை விட்டு வெளியேறினார்கள்.சென்னை மீனாட்சி கல்லூரி தேர்வு மையத்தில் 3 திருநங்கைகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் தீபிகா (வயது 25), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள விஸ்வநாதப்பேரி. அப்போது தீபிகா நிருபர்களிடம் கூறியதாவது:-எனது உண்மையான பெயர் கார்த்திக். திருநங்கையான பிறகு எனது பெயர் தீபிகா என்று மாற்றிக்கொண்டேன். என்னை உறவினர்கள் ஒதுக்கியதால் சென்னை சூளைமேட்டில் மற்ற திருநங்கைகளோடு வாழ்ந்து வருகிறேன். திருநங்கையான பிரித்திகாயாசினி சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகியதால், எனக்கும் போலீஸ் வேலையில் சேர ஆர்வம் ஏற்பட்டது. கடந்த ஆண்டும் தேர்வு எழுதினேன். 1 மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நான் தேர்வாக முடியவில்லை.மொத்தம் 80 மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வு நடந்தது. கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. இந்தமுறை கண்டிப்பாக எழுத்து தேர்வில் நான் வெற்றி பெறுவேன். சூளைமேடு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். திருநங்கை தோழிகளும் எனக்கு உதவிகரமாக இருந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.எழுத்து தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும். அதன்பிறகு இதன் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *