70 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனுடன் தொடர்பில் : புகழேந்தி

தினகரன் ஆதரவாளர் கர்நாடகாவை சேர்ந்த புகழேந்தி புதுவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் ஆட்சி விரைவில் முடியப்போகிறது. இதனால் எந்தவிதமான ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். நம்பி ஏமாறவும் வேண்டாம்.

பிரதமர் மோடியை குஷிப்படுத்த தமிழக அமைச்சர்கள் இந்தி கற்று வருகின்றனர். அ.தி. மு.க.வை அழிக்க நினைக்கும் மோடியை நம்பி தமிழக அமைச்சர்கள் ஏமாறுகின்றனர். நடிகர்கள் ரஜினியும், கமலும் கட்சி ஆரம்பித்ததில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்குள் தான் போட்டி. அவர்களை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவும் இல்லை. அவர்களுடைய செயல்பாடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நன்மை கிடைக்க போராடும் சக்தியாக இருந்த அம்மாவை நாம் இழந்துவிட்டோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றால் போதுமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு சாதகமான முடிவை பிரதமர் மோடி ஒருபோதும் எடுக்கமாட்டார். அவர் தமிழகத்திற்கு உதவவும் மாட்டார். யாரையும் சந்திக்கவும் மாட்டார்.

எங்கள் கைக்கு விரைவில் கட்சியும், ஆட்சியும் திரும்பவும் கிடைக்கும். கட்சி, இரட்டை இலை சின்னம், ஆட்சி எல்லாம் எங்களிடம் திரும்ப வரும். தமிழக எம்.எல்.ஏ.க்களில் 60 முதல் 70 பேர் இப்போதும் எங்களிடம் தொடர்பில் தான் உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பில் தீர்ப்பு வந்த பிறகு முழு கட்சியும் எங்களிடம் வந்துவிடும். இதனால் புதிய கட்சி தொடங்குவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

புதுவை எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் கூறியது போல காவிரிக்காக காவிரி படுகையில் உள்ள தமிழக எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் நல்ல தலைவருக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறியுள்ளார். முதலில் அவர் ராகவேந்திரா திருமண மண்டபத்தை விட்டு வெளியே வர வேண்டும். தமிழகத்தில் நல்ல தலைவர் தினகரன் தான். ரஜினி ஆங்கிலம் கற்றுக்கொள்ள சொல்கிறார். இதை அவரால் கர்நாடகாவில் வந்து சொல்ல முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது புதுவை வக்கீல் வேல்முருகன், பாண்டு, மூர்த்தி, உமா கணேசன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #Tamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *