முதலமைச்சர் எடப்பாடி உறவினரிடம் நிலமோசடி – கோவை தம்பதி கைது

போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக, சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம் (68) மற்றும் அவரது மனைவி சவிதா (58) என்பவர்களை, கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவர்கள் மகன் பிரபு என்பவரைத் தேடிவருகிறது.  சேலம் காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருண் (30). ரிதம் குரூப்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினராவார்.  இவர் சில மாதங்களுக்கு முன்பு, தன்னிடம் நில மோசடி செய்துள்ளனர் என்று மாவட்டப் பதிவாளரிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில்,  1997 ம் ஆண்டு, தன்னுடைய தாயார் திலகம், ராஜமாணிக்கம் சவிதா தம்பதிகளிடம் இருந்து, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், 4840 சதுர அடி இடம், 35 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், அதில் 528 சதுர அடி இடம் வேறு இருவருக்கு விற்றது போக, மீதம் உள்ள 4312 சதுர அடி நிலம், ஜெயக்குமார் என்பவருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நிலத்தை விற்ற ராஜமாணிக்கம் தம்பதிகள், 1999 ம் ஆண்டு ஏப்ரலில், தங்களுக்குத் தெரியாமலேயே நில உரிமையை ரத்து செய்துவிட்டு, பத்திரங்களைத் திருத்தி மோசடி செய்து, 2200 சதுர அடி நிலத்தை, மூர்த்தி என்பவருக்கு விற்றுவிட்டதாகவும், மேலும் அதே இடத்தை, பத்திரங்களை மோசடி செய்து, இன்னும் பலருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, 1997 ம் ஆண்டு, தங்களுக்கு நிலம் விற்பனை செய்யவே இல்லை என்று மறுப்பதாகவும், பத்திர மோசடி மூலம், 2013 ம் ஆண்டு, வங்கி ஒன்றில் ரூபாய். 1.20 கோடி வரை கடன் பெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து, துணை பதிவாளர் பெரியசாமி நடத்திய விசாரணையில், ராஜமாணிக்கம் தம்பதிகள், மோசடிப் பத்திரங்கள் மூலம் நில விற்பனை செய்துள்ளது தெரியவந்ததால், கோவை குற்றப்பிரிவு போலீசார், அவர்கள் மீது இபீகோ பிரிவுகள் 120 பி, 468, 471 மற்றும் 420 ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த மோசடியில் தொடர்புடைய ராஜமாணிக்கம் தம்பதிகளின் மகன் பிரபு என்பவர், கனடாவுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும், அவரைக் கைது செய்ய, போலீஸ் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு, பிரியா என்ற மகளும் உள்ளார். அவர்கள் மருமகன், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.ராஜமாணிக்கம் தம்பதிகள் ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம், போலி ஆவணங்கள் காட்டி ரூபாய் 1.20 கோடி தனியார் வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *