பன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தொலைபேசி உரையாடலில் கவர்னர் அளவிலானவர்கள் என்று கூறுவதால், இப்பிரச்சினையின் ஆழம் என்னவென்று தெரிகிறது.

இந்தநிலையில் கவர்னரின் அளவுக்கு அதிகமான பதட்டமும், அதனைத் தொடர்ந்து விசாரணை ஆணைய அறிவிப்பும், பேட்டியும், பேட்டியின் முடிவில் அவர் நடந்து கொண்ட விதமும் என இவை எதுவுமே முறையானதாக, நெறியானதாக தோன்றவில்லை.

கவர்னரின் வரம்பு மீறிய செயல் என்பது மிக தவறான முன்னுதாரணத்தை தான் ஏற்படுத்துகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விசாரணை அமைப்புகளே நம்ப தகுந்தது அல்ல என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில், கவர்னரின் ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது நம்பிக்கை உடையதாக இருக்குமா? அல்லது இது என்ன சாதிக்கப் போகிறது?. மேலும் இது சுயாட்சி தத்துவத்தை நசுக்குவது ஆகும்.

கவர்னர் தனது பேட்டியின் முடிவில் பெண் பத்திரிகையாளரிடம் தன் மாண்பை மீறி நடந்துக் கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்று தனிப்பட்ட நடவடிக்கைகளிலும், மாநில அதிகாரத்திலும் எல்லை மீறி அவர் நடந்து கொள்ளும் விதமும், ஆட்சேபத்துக்கும், கண்டனத்துக்கும் உரியது ஆகும்.

கவர்னர் பதவிக்கான மாண்பை காப்பற்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தாமாகவே டெல்லி திரும்பிட வேண்டும். பழனிசாமியின் அரசு கவர்னர் மீதும், மத்திய அரசின் மீதும் கொண்டு இருக்கிற அளவு கடந்த பயம் தொடரும் வரை, தமிழகத்துக்கு பின்னடைவையும் தலைகுனிவையும் தான் ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *