சினிமா துணை நடிகை வீட்டில் 40 பவுன் நகை, வைரம் கொள்ளை

பிராட்வே,
சென்னை கொத்தவால்சாவடி நாட்டுபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முதல் மாடியில் வசித்து வருபவர் பாவனா (வயது 22). சினிமா துணை நடிகையான இவர், நடிகர் பிரபுதேவா நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.
வடமாநிலத்தை சேர்ந்த பாவனா, தனது தாய் சுமன் (51), அண்ணன் நிகில் (24) ஆகியோருடன் வசித்து வருகிறார். நிகில், சொந்தமாக துணிக்கடை நடத்தி வருகிறார்.
துணை நடிகை பாவனா, வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கடந்த 23-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பி வந்தார்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், பின்னர் பீரோவை திறந்து துணிகளை வைக்க முயன்றார். அப்போது பீரோவில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 350 கிராம் தங்க கட்டிகள், ரூ.2 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 20 கிலோ வெள்ளிக்கட்டிகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் அதை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின்பேரில் கொத்தவால்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் பீரோவில் இரண்டு ஜோடி தங்க வளையல்கள் மட்டும் அப்படியே இருந்தன. ஆனால் வீட்டின் கதவில் உள்ள பூட்டுகள், பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை.
எனவே அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யாரேனும், கள்ளச்சாவி தயாரித்து வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனரா? அல்லது நகை, வைரம் கொள்ளை போனதாக துணை நடிகையின் குடும்பத்தினர் நாடகமாடுகிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டின் அருகேயே புறக்காவல் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *