ரஜினியை சந்திக்கும் திவாகரன்?! – தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர் திவாகரன் தரப்பினர். இந்த சந்திப்பின் மூலம், தினகரனுக்கு செக் வைப்பதுதான் திவாகரனின் பிரதான நோக்கம்.டெல்டா மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை நிலைநிறுத்த ரஜினியுடனான சந்திப்பு அவசியம் என நினைக்கிறார் திவாகரன் என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.டி.டி.வி. தினகரனுடனான மோதலுக்குப் பிறகு அம்மா அணியாகச் செயல்பட்டு வருகிறார் திவாகரன்.

தொண்டர்களை சந்திப்பது, கட்சியின் அடுத்தகட்ட இலக்கு என பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகச் செல்ல விரும்பினாலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்து இதுவரையில் எந்த சிக்னலும் அவருக்கு வரவில்லை. இதற்கு ஒரே காரணம், திவாகரனின் முயற்சிகளுக்கு செவிசாய்த்தால், எடப்பாடியை இயக்குவதே நான்தான் எனப் பேசத் தொடங்கிவிடுவார் என்ற அச்சம்தான்.

இதை அங்குள்ளவர்களும் நம்புவார்கள். எனவேதான், அவர்களை நெருங்கவிடாமல் மௌனம் காக்கிறார் முதல்வர். தினகரனுக்கு எதிராக சசிகலா அறிக்கை வெளியிடும்போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் சில அமைச்சர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். திவாகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தாலும் வம்பாகிவிடும் என்பதால்தான், தினகரன்-திவாகரன் அணிகள் காணாமல் போய்விடும் என கோவையில் பேட்டி அளித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், டெல்டா மாவட்டத்தில் உள்ள சில அமைச்சர்கள் திவாகரனிடம் நட்பு பாராட்டி வருகின்றனர். அவர்கள் மூலமாக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சில அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தரவும் முயற்சி செய்து வருகிறார் திவாகரன் என விவரித்த டெல்டா மாவட்ட பிரமுகர் ஒருவர், அரசியல்ரீதியாக பலமான அடித்தளத்தைப் போட வேண்டும் என நினைக்கிறார் திவாகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு அரசியல்ரீதியாக வளர்ந்துவிட்டார் தினகரன்.

அவரை அசைத்துப் பார்ப்பது அவ்வளவு எளிதானதல்ல. வரக் கூடிய தேர்தலில் பத்து சதவீதத்துக்கும்மேல் தினகரன் வாக்குகளைப் பெற்றுவிட்டால், அவரது அரசியல் பயணம் இன்னும் வேகமெடுத்துவிடும். எனவே, தினகரன் செய்யப் போகும் அரசியல் தவறுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் திவாகரன். லோக்சபா தேர்தலில் தி.மு.க அணியில் தினகரன் இணைந்துவிட்டால், அம்மா எதிர்த்த தி.மு.கவோடு கூட்டணி வைத்துவிட்டார் என அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அமையும் என நினைக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தன்னுடைய அணிக்குச் செல்வாக்கைக் கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் ஒருபகுதியாக, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேச விரும்புகிறார். இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் கவனத்துக்கும் தகவல் கொண்டு சேர்த்துள்ளனர். தலைவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என அங்கிருந்து பதில் வந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, டெல்டா மாவட்டங்களில் உள்ள தன்னுடைய செல்வாக்கை நேரடியாக விளக்கவும் தயாராக இருக்கிறார் திவாகரன்.

அம்மா அணி தொடங்கும்போதே, இளைஞர்களையெல்லாம் ஒன்றிணைத்து, அறிவியல்பூர்வமாகச் செயல்படுவோம் எனக் கூறியிருந்தார். டெல்டா பகுதியில் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் கைகோர்க்கும்போது தன்னுடைய செல்வாக்கின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என நினைக்கிறார். அரசியல்ரீதியாக தினகரனை வீழ்த்தவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ரஜினியுடனான சந்திப்புக்கு அனுமதி கிடைத்த பின்னரே, அடுத்தகட்ட முயற்சிகளை எடுக்க இருக்கிறார் திவாகரன் என்றார் விரிவாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *