எஸ்.வி.சேகர் வழக்கில் போலீஸ் பாரபட்சம் காட்டுகிறது

சென்னை,
நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து, பெண் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எஸ்.வி.சேகருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற அவரது வக்கீலின் கோரிக்கையை, நீதிபதி ஏற்கவில்லை. விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த முன்ஜாமீன் மனு நீதிபதி எஸ்.ராமதிலகம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று பத்திரிகையாளர்கள் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம், அகில இந்திய பெண் வக்கீல்கள் ஜனநாயகச் சங்கம் உள்பட பலர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரகுநாதன், ‘வேறு ஒரு நபர் எழுதிய இந்த பதிவை, எஸ்.வி.சேகர் முழுவதுமாக படித்து பார்க்காமல், தன் முகநூல் பக்கத்தில் தெரியாமல் வெளியிட்டு விட்டார். உண்மை நிலவரம் தெரிந்தவுடன், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு விட்டார்’ என்று வாதிட்டார்.
பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் ஆஜரான வக்கீல் கான்ஷியஸ் இளங்கோ, ‘ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதால், என்ன விதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. இதுபோன்ற வெறுப்பு கருத்துக்களை கூறி விட்டு, மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது. இவரது பதிவினால் அவமானம், வேதனை அடைந்தவர்களின் நிலையை பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதுபோல அவதூறான கருத்துக்களை தெரிவித்து விட்டு, மன்னிப்பு கேட்கத் தொடங்கி விடுவார்கள். மக்கள் கலை இலக்கிய மன்றத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் கோவன் அரசியல் தலைவரை விமர்சித்து பாடினார் என்பதற்காக அவரது வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், பெண் இனத்தை பற்றி அவதூறான கருத்தை வெளியிட்டவர், சென்னையில் இருந்தும் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று வாதிட்டார்.
அதேபோல, பெண் வக்கீல்கள் ஆர்.சுதா, டி.ஆர்.தாரா, ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்ளிட்டோரும் ஆஜராகி, ‘பல நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்த பெண்கள் இப்போது தான் சுதந்திரமாக எல்லா துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களை இழிவுப்படுத்தும் விதமான இந்த பதிவை மனுதாரர் வெளியிட்டுள்ளார். மன்னிப்பு கேட்டதால், குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை விட்டு விடலாம் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை. சேலம் மாணவி வளர்மதியை பெண் என்று கூட பாராமல், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். எஸ்.வி.சேகர் வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களை உடனடியாக கைது செய்தனர். அப்படிப்பட்ட போலீசாரால், எஸ்.வி.சேகரை மட்டும் கைது செய்ய முடியவில்லை’ என்று வாதிட்டார்கள்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ், ‘தமிழக போலீசார் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்’ என்று வாதிட்டார். அப்போது, ‘பாடகர் கோவன், மாணவி வளர்மதி, பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் போலீசாரால், இந்த வழக்கில் மட்டும் ஏன் அதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியவில்லை? போலீசார் பாரபட்சம் காட்டுகிறார்களா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், இந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *