பைனல்ஸ் நுழையப் போவது யார்… கொல்கத்தாவை சமாளிக்குமா ஹைதராபாத்!

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸ் நுழைவதற்கான 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் சீசன் 11ன் பைனல்ஸ்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே முன்னேறியுள்ளது.

முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று சிஎஸ்கே 7வது முறையாக பைனல்ஸ் நுழைந்துள்ளது.எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 25 ரன்களில் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த ஹைதராபாத், எலிமினேட்டரில் வெற்றியடைந்த கொல்கத்தா உடன் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, 27ம் தேதி மும்பையில் நடக்கும் பைனல்ஸ் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும். ஹைதரபாத் அணி இரண்டாவது முறையாகவும், கொல்கத்தா மூன்றாவது முறையாகவும் பைனல்ஸ் நுழைய காத்திருக்கின்றன. கடந்தாண்டு எலிமினேட்டரில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா வென்றது. மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணியான ஹைதராபாத், இந்த சீசனின் துவக்கத்தில் மிகவும் அபாரமாக விளையாடி, அனைத்து அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. முதல் 11 ஆட்டங்களில் 9ல் வென்றது. ஆனால், கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த சீசனில் பாதி ஆட்டங்கள் முடிந்திருந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. மும்பையிடம் 102 ரன்களில் மிகப் பெரிய தோல்வி அடைந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்றுள்ளது.

லீக் சுற்றில் ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா வென்றது. கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் வென்றது. இருந்தாலும், கடைசி கட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள தெம்பில் கொல்கத்தா உள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்துள்ள ஹைதராபாத், இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *