இருட்டு அறையில் முரட்டுக் குத்து : விமர்சனம்

தமிழ் சினிமாவின் வழக்கமான ஒரு விஷயம் உள்ளது. . ஏதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே சாயலில் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அப்படி தொடர்வது தான் தமிழகத்தில் பேய் படங்களின் வருகை. பத்து வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்த “முனி” படமும் அதை தொடர்ந்து வந்த காஞ்சனாவும் தான்  பேய் பட குவியல்களுக்கு காரணம்.. அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல.  இந்த படமும் பேய்ப்படமாகவே வெளியாகியுள்ளது.  

இப்போது பெரும்பான்மையான மக்களின் பயம் என்னவென்றால்  இந்த படம்  வெற்றி பெறுவதால் இந்த படம் போல எல்லா தயாரிப்பாளர் இயக்குனர்களையும் நாமும் ஏன் இந்த மாதிரியான  படம் எடுக்க கூடாதுன்னு யோசிக்க வைத்துவிடும் என்பதாகவே இருக்கும்,  ஏற்கனவே நாடெல்லாம் பாலியல் வன்முறை தலைவிரித்து   ஆடிக்கொண்டு  இருக்கும் போது, மாசத்துக்கு பத்து ஆபாச படங்கள் வந்தால் நாட்டின் கலாச்சார  நிலைமை என்ன ஆகும்.  

இந்த படங்களை பார்க்கிற  குழந்தைகள்  நிலைமை என்ன ஆகும்.வெளி நாடுகளில் வயதானவர்களுக்கு என்ற  படங்கள் வருகிறது. நம் நாட்டில் இது போன்ற படங்கள் வருவதில்லை. அதனால நான் இந்தமாதிரி படங்கள்  எடுக்கிறேன் என்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் ஏற்கனவே இதனைப்போலவே ஹரஹரமஹாதேவி என்ற படத்தை எடுத்தவர். அந்த படத்தின் வெற்றி இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தோடு பேய் கதையையும்  கலந்து பெரியவர்கள் பார்க்கும் படமாக வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா  சமூக அக்கறையுள்ள நடிகர் சிவகுமார் குடும்பத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உறவினர்களே அந்த படத்தை பார்க்கும் அளவிற்கு எடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. என்னதான் சென்சார் சர்டிபிகேட் வாங்கியிருந்தாலும் அனைத்து படங்களும் எளிதாக சிறுவர்களை வந்தடையும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கொஞ்சம் சமூக பொறுப்புடன் படத்தை எடுத்திருக்கலாம் என்பது படம் பார்க்கும் குடும்பஸ்தர்களின் எண்ணமாக இருந்திருக்கும். 

படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக்  வளர வேண்டிய இளம் கதாநாயகன் இந்தமாதிரியான படங்கள் அவருக்கு ஒருபோதும் பெயர் கொடுக்காது என்பதே உண்மை. இந்த படம் எடுத்தவர்களின் குடுமபத்தினரே ஒன்றாக அமர்ந்து திரையில் பார்க்க இயலாத வகையிலான தமிழில் வெளிவந்த அந்த மாதிரிப்படம்.  பிளேபாயாக வரும் கவுதம் கார்த்திக் பிளேபாயாகவே வாழ்ந்திருக்கிறார் . வைபவி சாண்டில்யா அழகான சிரிப்புடன் அவரது கதாபாத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் கிளாமரில் தூக்கலாகவே வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். சாரா இரட்டை அர்த்த வசனங்களால் சிரிப்பு மூட்டுகிறார். ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், ஜாங்கிரி மதுமிதா என மற்ற துணை கதாபாத்திரங்களும் படத்தில் உள்ளன. இவ்வளவு பேர் நடித்த இந்த படத்தின் கதை என்னவென்றால் , முழு இரட்டை அர்த்த வசனங்களுடன் வந்த நகைச்சுவையான பேய் படம் என்ற ஒற்றை வரியில் முடித்துவிடலாம்.  படத்தின் தொழில்நுட்பக்கலைஞர்கள் அவரவர் வேலையை செய்துள்ளர்கள். படம் பார்க்க வீட்டின் பெண்களோடு அல்லது குடுமபத்தினரோடு படம் பார்க்க சென்றால் அடுத்த ஒரு வாரத்திற்கு சாப்பாடு கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். வயசு பசங்க பார்க்கலாம், சிரிக்கலாம், ரசிக்கலாம் ஆனால் வெளியில் வந்து படத்தின் உள்ளபடி பேசி வாழ முயற்சித்தால் வாங்க வேண்டியதையும் வாங்கலாம். பல சிறந்த படைப்புகளை அளித்த தமிழ்திரைத்துறையில் இது போன்ற படங்களின் நுழைவு தமிழக கலாச்சாரத்தையே மாற்றும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *