மோடியுடன் இணைந்தால்தான் ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியும்.. குருமூர்த்தி ஆரூடம்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். ஆனால் பாஜகவுடன் அவர் கை கோர்க்க வேண்டும் என துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதாக கூறியிருக்கிறார் ரஜினி. ஆனால் எப்ப வருவேன், எப்படி வருவேன் என்பதை அவர் இதுவரை சொல்லவில்லை.

அவரை பின்னாலிருந்து பாஜக இயக்குகிறது என்று தமிழகம் முழுமையாக நம்புகிறது.ரஜினி அரசியல் வருகைக்கு பலரும் எதிர்ப்பாக உள்ளனர். காரணம், அவர் மக்கள் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் கருத்து தெரிவிக்காமல் பட்டும் படாமல் இருந்து வருவதால்.

ரஜினியின் அரசியல் ஆலோசகர் துக்ளக் இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்திதான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் துக்ளக் இதழின் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என அவர் கூறினார்.

கட்சிக்கு தலைமை உள்ளது, ஆனால் தமிழகத்திற்கு தலைமை இல்லை. பிரதமர் மோடி நல்ல ஆளுமை கொண்டவர். ரஜினியிடம் ஈர்ப்பு இருக்கிறது. இரண்டும் சேர்ந்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியும். ரஜினி, கமலிடம் அரசியல் குறித்து பேசுவேன். ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் நான் ஆலோசகர் இல்லை. ரஜினிக்கு நான் ஆலோசகராக உள்ளேன் என்பதில் உண்மை இருந்தால் எனக்கு பெருமைதான்.

மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம். மோடியின் ஆட்சி திறமை, ரஜினிக்கான மக்களின் ஆதரவு தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்பும். அதிமுக அரசுக்கு செயல்பாடு என்று ஒன்று இருப்பது போல் தெரியவில்லை. இருந்தால் பார்க்கலாம். நீட் குறித்து முழுபுரிதல் யாருக்கும் இல்லை என்பதால் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மக்கள் நல்லவர்கள், ஆனால் கட்சிகள்தான் போராடிக் கொண்டுள்ளன. கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்புகிறேன். கர்நாடக தேர்தலை கருதி காவிரி திட்டவரைவை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது நல்லது. காவிரி பிரச்னையில் வேறு சிந்தனையுடைய கர்நாடகா, கேரளா பேசி முடிவுக்கு வர வேண்டும். மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்துதான் ஆக வேண்டும். அதிலிருந்து மாற முடியாது. ஸ்கீமோ, வாரியமோ, ஏதாவது ஒன்றை அமைத்தாக வேண்டும். 3வது அணி அமைக்கும் முயற்சிகள் யாவும் பாஜகவுக்கே பலம் சேர்க்கும். எனவே அதனால் லாபம் அடையப் போவது பாஜகதான்.

எஸ்.வி.சேகர், எச். ராஜா ஆகியோர் பாஜகவை பிடித்த சனியன் என்று துக்ளக்கில் வந்துள்ள செய்திக்கு நான் பொறுப்பேற்க முடியாது. துக்ளக்கில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதை எடுங்க என்று நான் சொல்ல முடியாது. சொல்ல மாட்டேன் என்றார் குருமூர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *