தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு, போலீஸ் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

வாகனங்களுக்கு தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.
ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.

போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.  #sterliteprotest #BanSterlite #TalkAboutSterlite

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *