தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவரின் மகன் தந்தை ஊட்டி விட்டால்தான் சாப்பிடும் மனவளர்ச்சி குன்றியவர்!

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா (58) என்பவரும் ஒருவர்.
இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணி (48), மகன் ஜெகதீஸ் வரன் (27). ஆகியோருடன் தங்கியிருந்தார்.

கட்டுமான வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனி மனித உரிமைக்காக போராடுவதில் முன்னணியில் இருந்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100-வது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் சென்ற அவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து சென்ற அவர் ரத்த வெள்ளத்தில் மண்ணில் பிணமாக கிடந்தார்.

இந்த வீடியோ அனைத்து டெலிவி‌ஷன்களிலும் ஒளி பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அவரது மனைவி செல்வமணிக்கோ தனது கணவர் துப்பாக்கி சூட்டில் பலியானது தெரிந்து விட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து அவர் கூறும் போது, “டி.வி.யில் பார்த்தவுடன் துப்பாக்கி சூட்டில் பலியானது எனது கணவர் என தெரிந்து விட்டது.

இலங்கையில் ராணுவ தாக்குதலுக்கு பயந்து உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 1981-ம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி விட்டார்” என்றார்.
துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிலோன் காலனியில் அவரது உருவப்படம் பொறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரது ஒரே மகன் ஜெகதீஸ்வரனுக்கோ தனது தந்தை மரணம் அடைந்தது தெரியவில்லை. ஏனெனில் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவர். அவரால் பேச முடியாது. ஆனால் மற்றவர்களின் நடவடிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியும். இவர் தனது தந்தை கந்தையா மீது அதிக பாசம் கொண்டவர். அவர் ஊட்டி விட்டால் தான் உணவு சாப்பிடுவார்.

தற்போது அவர் உயிருடன் இல்லாததால் ஜெகதீஸ்வரன் கடந்த 5 நாட்களாக உணவு சாப்பிட மறுத்து பட்டினி கிடக்கிறார். இரவில் தனது தந்தையை கட்டிப்பிடித்து தான் தூங்குவார். தற்போது அவர் இல்லாததால் தூக்கமின்றி தவிக்கிறார். அவர் இறந்தது கூட தெரியாமல் பேனர் அருகேயே நிற்கிறார். இது அப்பகுதி மக்களின் நெஞ்சங்களை கணக்க செய்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு படிப்புக்கு தகுந்தபடி வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் கந்தையாவின் மகன் மனவளர்ச்சி குன்றியவர். படிப்பறிவு இல்லாதவர் அவரது மனைவி குடும்ப தலைவி, அவர் தனது மகன் ஜெகதீஸ்வரனை கவனிக்க வேண்டியுள்ளது. கந்தையாவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்தை காப்பாற்ற பாதுகாவலர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SterliteProtest #Thoothukudi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *