கருத்துகணிப்பு : ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் யார் ?


விடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது?


ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:-
வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்படி தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
கடந்த 23.3.2013ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள்.

இதனை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு தொழிற்சாலை முறையீடு செய்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், தொழிற்சாலையை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்து, அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மூடுதல் உத்தரவை ரத்து செய்து தொழிற்சாலையை இயக்குவதற்கு 31.5.2013 அன்று தனது உத்தரவில் அனுமதி அளித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு மூடுதல் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து, ஜெயலலிதா அவர்கள் 2013ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இவ்வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.

இந்நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்நிறுவனம் தாமிர உருக்காலை 2018-2023 வருடத்திற்கான இசைவாணையை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்தது.
இதனை பரிசீலனை செய்ததில், பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது:
1. தொழிற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

2. உப்பார் ஆற்றங்கரை மற்றும் தனியார் நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர உருக்குக் கழிவுகளை அகற்றுவதற்கும், உருக்குக் கழிவுகள் உப்பாற்றில் கலப்பதை தடுப்பதற்கு தடுப்புச் சுவர் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

3. தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரம் முடிவடைந்து விட்டது. ஆனால், தொழிற்சாலை தீங்கு விளைவிக்கும் மற்றும் பிற கழிவுகள் விதிகள் 2016-ன் கீழ் அங்கீகாரம் பெறாமல், கழிவுகளை தொடர்ந்து
வெளியேற்றி வந்துள்ளது.

4. தொழிற்சாலை காற்றின் தரத்தை அறிவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைடு, மிதக்கும் துகள்கள் மற்றும் சல்ஃபர்-டை-ஆக்ஸைடு போன்ற காரணிகளை வாரிய ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, ஆர்சனிக் போன்ற கன உலோகக் காரணியையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், காற்றில் ஆர்சனிக் இல்லை என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
5. ஜிப்சம் கழிவுகளை சேகரிப்பதற்கான குளங்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியதை தொழிற்சாலை நடைமுறைப்படுத்தவில்லை.

மேற்கூறிய காரணங்களினால், இசைவாணை புதுப்பிப்பதற்கான தொழிற்சாலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. மேலும், “வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக் கூடாது” என்று 12.4.2018 நாளிட்ட நடப்பாணையின் மூலம் இந்நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9.4.2018 தேதியிட்ட நிராகரித்தல் ஆணையை எதிர்த்து, இந்நிறுவனம் மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. 17.5.2018 அன்று இம்மனு விசாரணைக்கு வந்து விசாரணை 6.6.2018க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் வாதிட்ட தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்கள், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார். இவ்விவரம் அன்றைய செய்தித் தாள்களிலும் விரிவாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 2013ல் ஜெயலலிதா அவர்கள் இவ்வாலையை மூடுவதற்கு உத்தரவிட்டதைப் போலவே, தற்போதும் இவ்வாலை இயங்காமல் இருப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, இன்று (22.5.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் நபர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது, அக்கூட்டத்தினர் வன்முறையில் ஈடுபட்டு, காவல்துறை வாகனங்களைத் தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி
மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அரசு சட்டபூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *