தூத்துக்குடியில் அமைதி திரும்பியது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன

தூத்துக்குடி, தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று அமைதி திரும்பியதால் வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.தூத்துக்குடி மாநகர பகுதியில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன.

இதன் காரணமாக தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக பஸ்கள் இயங்காததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் தூத்துக்குடியில் ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

சில இடங்களில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டன.இந்த நிலையில் 5-வது நாளான நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து நெல்லை, திருச்செந்தூர், மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. நகர்ப்புறத்தில் ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.மேலும் ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் வழக்கம்போல் ஓடின. தூத்துக்குடியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.கடந்த 5 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் நேற்று முழு அமைதி திரும்பியதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் சரியாக இயக்கப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிப்பு அதிகாரிகள் டேவிதார், ககன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது, பஸ் டிரைவர்கள், பயணிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என்பது குறித்து கேட்டு அறிந்தனர். பசுமை பண்ணை காய்கறி கடைகளில் பொதுமக்களுக்கு அனைத்து காய்கறிகளும் கிடைக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

பின்னர் கண்காணிப்பு அதிகாரி டேவிதார் நிருபர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) காலையில் புறநகர் பகுதிக்கு 150 பஸ்களும், நகர்ப்புறத்தில் 150 பஸ்களும் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து தனியார் பஸ்களும் படிப்படியாக இயக்கப்படும்.நேற்று (நேற்று முன்தினம்) பஸ் எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. பஸ்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மேற்கொள்ளப்படும்.

தவறான எண்ணத்துடன் யாரேனும் பஸ்களை நெருங்கி வந்தால், அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தூத்துக்குடியில் இணையதள சேவை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இணையதள சேவை கிடைக்கும். தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் இறந்த 7 பேரின் உடல்கள் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 52 பேருக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் காணாமல் போனவர்கள் குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை அணுகி புகார் தெரிவிக்கலாம். தூத்துக்குடியில் 100 சதவீதம் அமைதி திரும்பிய உடன் படிப்படியாக போலீசாரை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *