சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லட்சம் பேர்!’ – டி.டி.வியின் அடுத்த மூவ்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன்.

சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லட்சம் பேர் என்ற அளவில் உறுப்பினர்களை சேர்க்கச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சேருகிறவர்கள் உண்மையானவர்கள்தானா என்பதைக் கண்டறியவும் தனிக்குழுவை அமைத்திருக்கிறார் தினகரன் என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.

மதுரை, மேலூரில் அ.ம.மு.க என்ற அமைப்பைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கினார் தினகரன். இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இருந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் ஒதுங்கியிருப்பதாகக் கூறப்பட்டாலும், தினகரன் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் இவர்கள் பங்கேற்கின்றனர்.

குறிப்பாக, புதிய அமைப்புக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நாங்கள் அ.தி.மு.கவிலேயே நீடிக்கிறோம் என உறுதியாகத் தெரிவித்தவர்களும் தினகரன் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அமைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்தத் திட்டமிட்ட தினகரனுக்குக் குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த துக்க நிகழ்வுகள் தடையை ஏற்படுத்தின. நடராஜன் மரணத்துக்குப் பரோலில் சசிகலா வந்து சென்ற சில நாட்களிலேயே திவாகரனுடன் மோதல் போக்கைக் கடைபிடித்தார். ஒருகட்டத்தில், என்னுடைய பெயரை திவாகரன் பயன்படுத்தக் கூடாது என சசிகலா மூலமாகவே அறிக்கை வெளியிட வைத்தார் தினகரன். இப்போது அம்மா அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார் திவாகரன்.

மன்னார்குடி குடும்பத்தில் எதிரிகள் யாரும் இல்லை எனக் கூறும் அளவுக்கு தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிவிட்டார் தினகரன். கடந்த சில நாட்களாக அமைப்பின் சீனியர் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை அவர் பிறப்பித்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், அமைப்பின் பொருளாளர் ரங்கசாமி, கடந்த சில நாட்களாக தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து வலியுறுத்தப்பட்டது. வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும்; வாக்காளர் பட்டியலைப் பார்த்து உறுப்பினர்களை சேர்க்கக் கூடாது; எந்தக் கட்சியிலும் இல்லாத நபர்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்; உறுப்பினர் சேர்க்கையின்போது இதர நிர்வாகிகளும் உடன் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றியெல்லாம் ரங்கசாமி எங்களிடம் விளக்கினார். இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கு தனியாக ஒரு டீம் அமைத்திருக்கிறார் டி.டி.வி.

உறுப்பினர் படிவத்தில் உள்ள நபரின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டு, இது நீங்கள்தானா? கட்சி நிர்வாகி உங்களை வந்து சந்தித்தாரா? என்ற கேள்விகளைக் கேட்க உள்ளனர். இதில் ஏதாவது தவறு இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார் தினகரன்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறார். தவிர, 1 லட்சம் வாக்குகள் இருக்கும் பகுதியில் 60 சதவீதம் பேர் அ.ம.மு.கவில் இணைய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.

அ.ம.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன் என்றார் விரிவாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *