அசத்தும் அமமுக! ஆழ அஸ்திவாரமிடும் தினகரன்! ஓபிஎஸ், இபிஎஸ் திணறும் அளவிற்கு நடந்தது என்ன!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் சென்னை அசோக்நகர் நடேசன் சாலை போலீஸ் பயற்சி கல்லூரி அருகே 2 மாடி கட்டிடத்தில் இன்று திறக்கப்பட்டது.  

துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்த திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பின்னர் அங்கு இருந்த கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள தினகரன்  அறைக்கு சென்று கட்சி சம்பந்தப்பட்ட கோப்புகளை தினகரன் பார்வையிட்டார். அவரது அறையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் தினகரனுக்கு யாரும் எதிர்பாராத அளவில் தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் டி.டி.வி.தினகரன், தொண்டர்கள்  ஆரவாரத்தில் உரையாற்றினார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று அமோக வெற்றி பெற்றோம். இதன் மூலம் மக்களின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும் நம்மிடமே உள்ளது. தற்போது தமிழகத்தில் துரோகிகள் ஆட்சி நடந்து வருகிறது.

விரைவில் விரட்டி  அடித்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவோம்  அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் மீட்டெடுப்போம். புரட்சித்தலைவி ஆட்சியை மீண்டும் அமைப்போம் என தினகரன் பேசினார். 

மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வெற்றி பெறுவோம். தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது இப்போதுள்ள துரோகிகள் யாரையும் கட்சியில் சேர்க்கமாட்டோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு அலுவலகம் தேவை என இடம் தேடிய போது 2 மாதத்துக்கு முன்பு இந்த இடத்தை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா வழங்கினார். இங்கிருந்து நாம் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளோம். விரைவில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம். தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவோம் என தினகரன் சூளுரைத்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *