எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க தயார் – அன்புமணி ராமதாஸ் சவால்

சென்னை:
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சேலத்தில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார மந்திரியாக இருந்த போது தமிழக மக்களுக்காக என்ன செய்தார்?’ என்று வினா எழுப்பியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்றால் அது தேசிய ஊரக சுகாதார இயக்கம் தான். இந்த திட்டத்தை 2005-ம் ஆண்டில் நான் தான் தொடங்கினேன். இந்தத் திட்டத்தின்படி தான், தமிழகத்தில் சீரழிந்து காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன.
கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு பார்க்க உதவுவதில் தொடங்கி முதல்-அமைச்சரின் உயிரைக் காப்பது வரை அனைத்துக்கும் உதவுவது நான் தொடங்கி வைத்த 108 அவசர ஊர்தித் திட்டம் தான்.
மக்களுக்கு பெருந்தீமையை ஏற்படுத்தும் குட்காவை தடை செய்தது நான் தான். மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக அமைச்சராக நான் படைத்த சாதனைகள் இத்துடன் முடிந்து விடவில்லை. அவற்றை முழுமையாக பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்பது தான் உண்மை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மக்களுக்காக நான் செய்த பணிகள் என்ன? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்த பணிகள் என்ன? என்பது குறித்தும் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.
முதல்-அமைச்சர் குறிப்பிடும் நாளில், குறிப்பிடும் இடத்தில் விவாதத்தை நடத்திக் கொள்ளலாம். இதற்கு தயாரா? என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AnbumaniRamadoss #EdappadiPalaniswami

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *