‘என்னைக் காப்பாற்றிய கருணாநிதி’: நெகிழ்ந்த பன்னீர்

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்கப் போன தலைவர்களின் படங்கள் வந்து விழுந்தபடி இருந்தது. அதில், துணை முதல்வர் பன்னீர், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து நலம் விசாரித்த படமும் இருந்தது.

அதைத் தொடர்ந்து அடுத்த மெசேஜ்ஜும் வந்தது. “ கருணாநிதிக்கு உடல்நிலையில் நலிவு ஏற்பட்டது என்ற தகவலை அடுத்து நேற்று மாலையில் இருந்தே ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் கோபாலபுரம் வீட்டுக்குப் போய் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தபடி இருந்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சிலரையும் துணை முதல்வரையும் அழைத்துப் பேசியிருக்கிறார். ‘கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்காருன்னு செய்தி வந்துகிட்டே இருக்கு. அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்த போது ஸ்டாலின் வந்து பார்த்துட்டுதான் போனாரு. இப்போ நாம போய் விசாரிக்கிறதுதான் நாகரீகமா இருக்கும். நானே போகலாம்னுதான் யோசிச்சேன். எடுத்ததும் நான் போறதைவிட நீங்க நாலு பேரு போய் பார்த்து விசாரிச்சிட்டு, அவரோடு பேசிட்டு வாங்க. அதுக்குப் பிறகு நான் போய் பார்க்கிறேன்…’ என்று சொன்னாராம்.

அதற்கு பன்னீர், ‘நானே இதை உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். நீங்க சொல்லிட்டீங்க. என்னதான் அவங்க எதிர்க்கட்சியாக இருந்தாலும் நம்ம திராவிட இயக்கத்தில் தற்போது இருக்கும் தலைவர்களில் மூத்தவர் கலைஞர்தான். அதனால் போய் பார்க்கிறதுதான் சரியாக இருக்கும்…’ என்று சொன்னாராம். மேலும், ’கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்ட அமைச்சராக துரைமுருகன் இருந்தாரு. அவர் என் மேல சொத்துக் குவிப்பு வழக்கு தொடருவதற்காக வந்த ஃபைலை கலைஞரிடம் கொடுத்திருக்காரு. அதுக்கு கலைஞர், ‘பன்னீர் அடிமட்டத்துல இருந்து வந்து முதலமைச்சர் ஆனவரு. என்ன இருந்தாலும் திராவிட அரசியல்ல வந்தவர். அவரு மேல இப்போ கேஸை போட்டு சிக்கல்ல மாட்டி வைக்க வேண்டாம் விடுங்க..’னு சொல்லியிருக்காரு. இதை துரைமுருகனே சட்டமன்றத்துல என்கிட்ட சொல்லியிருக்காரு’ என்று பழைய நினைவுகளையும் தனது சகாக்களிடம் சொல்லி நெகிழ்ந்திருக்கிறார் பன்னீர்.

நேற்று இரவு பன்னீர், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி நான்கு பேரும் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார்கள். கோபாலபுரத்தில் இருந்து, செனடாப் ரோடு வீட்டுக்கு கிளம்புவதற்கு ஸ்டாலின் புறப்படும் நேரத்தில்தான் பன்னீர் வரப்போகும் தகவலை ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘வரட்டும்… பார்த்துட்டே போறேன்’ என ஸ்டாலினும் உட்கார்ந்து கொண்டாராம்.

நான்கு பேரும் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார்கள். வீட்டு வாசலை நிமிர்ந்து பார்த்தபடியே உள்ளே நுழைந்தார் பன்னீர். வழக்கமாக கோபாலபுரம் வீட்டில் விசிட்டர்களை கருணாநிதி சந்திக்கும் ஹாலில்தான் எல்லோரையும் உட்கார வைத்தார் ஸ்டாலின். கருணாநிதி உட்காரும் இடத்தில் ஸ்டாலின் உட்கார்ந்து பேசினார். ‘எப்படி இருக்காரு தலைவரு?’ என்றுதான் பன்னீர் ஆரம்பித்திருக்கிறார். ‘இப்போ பரவாயில்லை. மூச்சுவிடுறதுல கொஞ்சம் சிரமம் இருந்துச்சு. இப்போ நார்மலாகியிருக்காரு…’என்று சொல்ல… ‘வீட்டில் இருப்பதை விட ஹாஸ்பிட்டலுக்கு மாத்திடலாமே… என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய நாங்களும் ரெடியா இருக்கோம்..’ என்று பன்னீர் சொன்னாராம்.

அதற்கு ஸ்டாலினோ, ‘ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ற அளவுக்கு பிரச்னை இல்லைன்னு டாக்டர்கள் சொல்றாங்க. செயற்கை சுவாசம் செலுத்த வேண்டி இருந்தால், நீங்க சொல்ற மாதிரி ஹாஸ்பிட்டல் செட் அப்புக்கு போகணும். அதுக்கான அவசியமே இல்லை. அவருக்கு மூச்சு விடுறதுல எந்த சிரமமும் இல்லை. ஹார்ட் பீட்டும் நல்லா இருக்கு…சிறுநீரகத் தொற்றுதான் காய்ச்சலுக்கு காரணம்னு சொல்றாங்க. அது சரியானாலே காய்ச்சல் குறைஞ்சிடும்..’ என ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். ‘நாங்க எல்லோருமே இருக்கோம் அண்ணா… என்ன வேணும்னாலும் சொல்லுங்க பண்ணிடலாம்’ என்று அமைச்சர் வேலுமணியும் சொல்ல… ’நீங்க எல்லோரும் இவ்வளவு தூரம் வந்து விசாரிச்சதே எனக்கு சந்தோஷமா இருக்கு. தலைவர் முழிச்ச பிறகு நீங்க வந்ததை சொல்றேன்’ என்று கண் கலங்கியிருக்கிறார். ‘தைரியமாக இருங்க…’ என்று ஸ்டாலின் கைகளைப் பிடித்தபடி சில நிமிடங்கள் ஓபிஎஸ் தான் நின்றிருக்கிறார். அப்போது அருகில் இருந்த துரைமுருகன், ‘நீங்க எல்லோரும் வீட்டுக்கு வந்திருப்பது தலைவருக்கு தெரிஞ்சா சின்னக் குழந்தை மாதிரி ரொம்பவும் சந்தோஷப்படுவாரு…’ என்று சொன்னாராம். வந்திருந்த அமைச்சர்களை வாசல் வரை வந்து வழி அனுப்பிவிட்டுப் போனார் ஸ்டாலின்” என்று முடிந்த மெசேஜை செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *