ஓபிஎஸ் – குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார்; விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது- தமிழக அரசு

சென்னை, தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழக துணை முதல்- அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், கடந்த 1996-ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்-அமைச்சர் என்று பதவிகளை வகித்து பொது ஊழியராக இருந்து வருகிறார்.

இவர் தன் மனைவி பி.விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு, தன் சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தொழில் பங்குதாரர்கள், பினாமிகளின் ஆகியோரது பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார்.ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.

ஆனால், 2016-ம் ஆண்டு தேர்தலின்போது, வருமானத்தை குறைத்து காட்டியுள்ளார்.பெரியகுளத்தில் தனக்குள்ள விவசாய நிலங்களையும், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள வீட்டின் சொத்து மதிப்புகளையும் மறைத்துள்ளார். வருமானமே இல்லாத குடும்ப தலைவியான தனது மனைவி விஜயலட்சுமிக்கு ரூ.78 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, பினாமிகளின் பெயரிலும் மாந்தோப்பு உள்ளிட்ட ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார்.அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.அவரது மகன்கள் பல நிறுவனங்களில் இயக்குனர்களாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது மகன் வி.ஜெய பிரதீப் 3 மிகப்பெரிய நிறுவனங்களின் இயக்குனராக பதவி ஏற்கும்போது, அவருக்கு 25 வயது கூட ஆகவில்லை. சின்ன வயதில், பல கோடி ரூபாய் முதலீடுகளை அவரால் எப்படி செய்ய முடிந்தது?சேகர்ரெட்டியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி கொடுத்ததாக குறிப்புகள் உள்ளது.எனவே, ஓ.பன்னீர்செல்வம், தன் மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக சேர்ந்துள்ளார்.

இது குறித்து கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தும், இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாஸ் ஆஜராகி, ‘மனுதாரர் புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்’ என்று கூறினார்.அதற்கு நீதிபதி, ‘புகார் மார்ச் மாதமே கொடுக்கப்பட்டுவிட்டது.

இதுநாள் வரை போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் பெயர் உள்ளது என்று புகார்தாரர் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசரணைக்கு மாற்றினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், ‘இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்றார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அன்று விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்டார். இன்று  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில்  பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

அதில்  ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *