சென்னையில் விற்பனையாகும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ‘பார்மாலின்’ கண்டுபிடிப்பு

சென்னையில் பிரதானமான சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மீன் விற்பனை சந்தைகளில் இருந்து இரு வெவ்வேறு நாட்களில் வாங்கப்பட்ட 30 மீன் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், 11 மாதிரிகளில் மனிதர்களுக்குப் புற்று நோயை உண்டாக்கக் கூடிய கொடிய வேதிப்பொருளான பார்மாலின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வுகள் அனைத்தும், தி இந்துவுக்காக(ஆங்கிலம்) தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்களால் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் மீன்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பார்மலின் இருப்பது முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்மாலின் என்றால் என்ன?

பார்மாலின் எனப்படுவது பதப்படுத்தி மற்றும் கிருமிநாசினியாகும். நிறமற்ற, வண்ணங்கள் அற்ற ஒரு வேதிப்பொருளாகும். இந்த வேதிப்பொருளைத் தண்ணீரில் கலந்து, நாம் மாமிசத்தையோ அல்லது, மீன்கள், உடலின் ஒருபகுதி என எதை வைத்தாலும் அது அழுகாமல், கெட்டுப்போகாமல் நாட்கணக்கில் இருக்கும். இந்த பார்மாலின் மனித உடற்கூறு ஆய்விலும் பயன்படுத்தப்படுகிறது.

மனிதனுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பார்மாலின் கலக்கப்பட்ட உணவுப்பொருட்களை மனிதர்கள் உட்கொள்ளும் போது, கண்கள், தொண்டை, தோல், வயிறு பகுதிகளில் எரிச்சல், நமச்சல் ஏற்படும். நீண்டகாலத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது, கிட்னி, கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக ரத்தப் புற்றுநோயை உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *