‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும் – டிடிவி. தினகரன்

 

‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும். அப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறைக்கு செல்வார்கள். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பேசினார்.

கோவை மாநகர தெற்கு, வடக்கு மற்றும் புறநகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம், கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். அமைப்புச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சேலஞ்சர் துரை வரவேற்றார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் விளங்குவதால், இங்குள்ள தொண்டர்கள் பலரை சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் செய்த சில தவறுகளால், கட்சியையும், ஆட்சியையும் பாதுகாப்பதற்காக அவரை நீக்கிவிட்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா.

அதிகாரம் கைக்கு வந்தவுடன், அவரையே கட்சியை விட்டு நீக்கினர்.

ஜெயலலிதாவால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்கவே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.

இன்று சொல்கிறேன். 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று, பொதுச்செயலாளர் சசிகலா அனுமதி அளித்தால் மட்டுமே முதல்வர் பதவியில் அமருவேன். இல்லையென்றால் தொண்டருக்குதான் அந்த பதவி.

தற்போது திருச்செங்கோடு, ராசிபுரத்தில் சோதனை (ரெய்டு) நடைபெற்று வருகிறது. ‘முட்டை’ வடிவில் அணுகுண்டு வெடிக்கும். அப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் சிறைக்கு செல்வார்கள். 18 எம்எல்ஏ.க்கள் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அப்போது பெரும்பான்மை நிரூபிக்க வேண்டி வரும். சட்டப்பேரவையைக் காலி செய்து கொண்டு போகும் நிலை வரும். அப்போது கட்சியையும், சின்னத்தையும் அமமுக கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *