தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடக்கிறது – டி.டி.வி.தினகரன் பேட்டி

திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு மத்திய அரசு மும்முரம் காட்டுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சாலை திட்டத்தை போராடி பெற்றதாகவும், இச்சாலை அமைந்தால் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற் வளர்ச்சி பெருகும் என ஒரு முறை கூறினார்.

சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளிக்கும்போது பசுமை சாலை மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். மாநில அரசு நிலத்தை ஆர்ஜிதம் மட்டுமே செய்து கொடுக்கிறது என்றார். இப்போது எடப்பாடி பழனிசாமி மாறி மாறி பேசுகிறார்.

கடந்த பிப்ரவரி மாதமே பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன்பிறகே மத்திய அரசு சாலை அமைக்கும்பணியை தொடங்கியது. பசுமை சாலை அமைக்க அவசரம் எதற்கு?

விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து தான் போராடுகின்றனர். அவர்களை யாரும் தூண்டி விடவில்லை. நீர் நிலைகள், மலைகள், இயற்கையை அழித்து பசுமை சாலையை அமைப்பது என்பது சரியான திட்டமாக தெரியவில்லை.

1 ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்கின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை சந்தித்து திட்டம் குறித்து விளக்கியிருக்க வேண்டும்.

பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலத்தை விட்டுக் கொடுக்க யாருக்கும் மனசு வராது. அரை ஏக்கர் நிலத்திற்காக சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லும் சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம்.

பசுமை சாலை அமைக்க மும்முரம் காட்டும் எடப்பாடி அரசு, அதே வேகத்தில் நீட் தேர்வில் விலக்கு கொண்டு வர மத்திய அரசிடம் போராடி இருக்க வேண்டும். விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்று எடப்பாடி கூறி கொள்கிறார்.

ஆனால், விவசாயிகளின் கஷ்டங்களை அவர் அறியவில்லை. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. அந்த சாலையை விரிவுப்படுத்தினாலே போதும்.

பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்கு போடுகின்றனர். குரல் வளையை நெரிக்கின்றனர். தமிழகத்தில் ராணுவ ஆட்சி நடக்கிறது.

அம்மாவின் ஆட்சி நடப்பதாக எடப்பாடி கூறுகிறார். இது அம்மாவின் ஆட்சியே கிடையாது.

18 எம்.எல்.ஏ.க்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த வழக்கால், எடப்பாடி அரசு தப்பித்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Edappadipalanisamy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *